இறுதிப் போரின்போது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கம் தொடர்பாகப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இறுதிப்போரில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டவை என்று தெரிவித்து ஒரு தொகுதி நகைகள் இராணுவத்தால் பொலிஸாரிடம் கடந்த 2ஆம் திகதி ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்துக்கு என்ன நடந்தது? என்பது குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
2010ஆம் ஆண்டு போர் முடிந்ததும் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து 200 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது என்று அப்போதைய இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். ஆனால் 2010 முதல் 2012ஆம் ஆண்டு காலப்பகுதியில் 28 தடவைகளில் மொத்தமாக 31.7 கிலோ தங்கம் இலங்கை மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் 2016ஆம் ஆண்டு 6 கிலோ தங்கம் மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டது. 201ஆம் ஆண்டுவரை மொத்தமாக 37.7 கிலோ தங்கம் மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு 40 கிலோ தங்கம் காணாமல் போயுள்ளது என்றும், அது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டிருந்தார். ஆனால் அவ்வாறான விசாரணைகள் எதுவும் நடக்கவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தில் அரைவாசி இராணுவத்தினரின் கைகளில் உள்ளது எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
2 ஆயிரத்து 377 பேருடைய நகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும், அடையாளம் காணப்பட்ட நகைகள் திருப்பி ஒப்படைக்கப்படவுள்ளன என்றும் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தேர்தல் பரப்புரையின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியிருந்தார். ஆனால் 25 பேருடைய நகைகள் மட்டுமே திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இப்போது பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நகைகள் அளவீடு செய்யப்படவில்லை எனவும், பொருள் பதிவேடு கையளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ள பொலிஸார், இராணுவத்தினர் எதற்காக இவ்வளவு நாளும் நகைகளை இராணுவ புலனாய்வுப் பிரிவில் வைத்திருந்தமை தொடர்பில் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
காணாமல் போயுள்ளது என்று தெரிவிக்கப்படும் நகைகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு தற்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது