வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளால் தாங்கள் மிகவும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாக, காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைத் தேடும், யாழ்ப்பாண மாவட்ட போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள், இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர் மற்றும் இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்ரூ பெட்ரிக் ஆகியோருக்கு இடையில், கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய பாரிய மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகளில் சர்வதேச தலையீடு தேவை என வலியுறுத்தியுள்ளனர்.
“எங்கள் பகுதியில் அடிக்கடி காணப்படும் புதைகுழிகள் பற்றி அறியும்போது நாங்கள் மன அழுத்தத்தில் இருக்கிறோம். இந்த புதைகுழிகள் அகழ்வாராய்ச்சி சர்வதேச விதிகள் மற்றும் விதிமுறைகளின்படியும், சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழும் செய்யப்பட வேண்டும்.”
செம்மணியில் உள்ள சித்துபாத்தி மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகள், நிதி பற்றாக்குறை காரணமாக 7ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, 19 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.
இந்த எலும்புக்கூடுகளில் 10 மாதங்களுக்கும் குறைவான மூன்று குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் இருந்ததாக அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ சர்வதேச ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
தற்போதைய பணிகளுக்கான நிதிக்கான நிபுணர்களின் கோரிக்கையை அரசாங்கம் பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.
சந்திப்பின் பின்னர், தமது கோரிக்கைகள் அடங்கிய ஒரு கடிதத்தை, இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகரிடம், யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா கையளித்தார்.
அந்தக் கடிதத்தில், இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகள் போர்க்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளை தண்டிக்கமாட்டோம் எனக் குறிப்பிடுவதாகவும், சட்டமா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் தமிழ் இனப்படுகொலையைச் செய்தவர்களின் பாதுகாப்பிற்கு துணை நிற்பதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த அல்லது ஒப்படைக்கப்பட்ட நமது அன்புக்குரியவர்களின் கதியை விசாரித்து வெளிப்படுத்த அழுத்தம் கொடுக்கப்பட வேண்டுமென குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அந்த நேரத்தில் முக்கிய சோதனைச் சாவடிகளுக்குப் பொறுப்பாக இருந்த தளபதிகளை விசாரிப்பதன் மூலம் இதைச் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் குறைகள் மற்றும் நீதிக்கான தொடர்ச்சியான போராட்டம் குறித்து கேட்டறிந்ததாக அன்ரூ பெட்ரிக் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
போர்க்குற்றங்களின் அடிப்படையில் மனித உரிமை மீறல்களுக்கு இலங்கையின் பொறுப்புக்கூறல் குறித்து 2015 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜெனீவா தீர்மானத்தை இணைந்து எழுதிய ஐந்து நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்றாகும்.
எதிர்வரும் செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வில் கொண்டுவரப்படவுள்ள ஒரு தீர்மானத்தின் மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்ட கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இனப்படுகொலை நடைபெற்ற சில நாடுகளில் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதைப் போலவே, இலங்கையில் தமிழ் சமூகத்திற்கு நீதியை உறுதி செய்ய சர்வதேச சமூகம் முன்வர வேண்டுமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜா குறிப்பிடுகின்றார்.
ஐக்கிய நாடுகள் சபையால் நிறுவப்பட்ட இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் (SLAP) சேகரித்த ஆதாரங்களைப் பயன்படுத்தி அவ்வாறு செய்ய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
“தீர்மானம் 46/1 இன் கீழ், இலங்கை பொறுப்புக்கூறல் திட்டம் (SLAP) நம்பகமான ஆதாரங்களை சேகரித்து ஆவணப்படுத்தியுள்ளது மற்றும் வலுவான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஒரு புதிய நீதி பொறிமுறையை நிறுவி, செப்டம்பர் 2025 இல் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் கவுன்சிலின் 60வது அமர்வில் ஒரு தீர்மானமாக தாக்கல் செய்ய வேண்டும். இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு (ICC) முன் கொண்டுவருவதற்கான இந்த முயற்சியை அனைத்து நாடுகளும் ஆதரித்து ஊக்குவிக்க வேண்டும்.”
இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை கடுமையாக எதிர்க்கும் இலங்கை அரசாங்கம், உள்நாட்டு நீதித்துறை அமைப்பு பொறுப்புக்கூறல் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வல்லது எனக் கூறுகிறது