அகழ்வுப்பணிகள் இடம்பெற்ற செம்மணி புதைகுழிப்பகுதிக்கு (அரியாலை - சிந்துபாத்தி மயானம்) ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சற்றுமுன்னர் வருகைதந்தார்.
இலங்கைக்கு விஜயம் செய்து, யாழ்ப்பாணத்தை புதன்கிழமை (25) மாலை வந்தடைந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) சர்ச்சைக்குரிய செம்மணி புதைக்குழியையும் பார்வையிட்டார்.
ஸ்ரீ லங்கா விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த அவர், நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.
செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ‘அணையா விளக்கு’ போராட்டத்தின் இறுதி நாளான புதன்கிழமை (25) பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெற்றது.
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் ‘அணையா விளக்கு’ போராட்டம் எனும் தொனிப்பொருளில் சர்வதேச நீதி கோரி திங்கட்கிழமை (23) ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் இரவு பகலாக நடைபெற்று மூன்றாவது நாளான புதன்கிழமை (25) மிகவும் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய காலையில் அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்தும் அணையா விளக்குப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், தாயகச் செயலணி உறுப்பினர்கள் மகஜர் கையளித்து செம்மணிக்கு விஐயம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், ஆணையாளர் வோல்கர் டர்க்கரை செவ்வாய்க்கிழமை (24) தாயகச் செயலணி மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் செல்வகுமார் தலைமையில் சென்ற குழுவினரே இவ்வாறு அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்திற்கு புதன்கிழமை (25) விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோக்கர் டர்க் (Volker Türk) கவனத்தை ஈர்க்கும் முகமாக கோவில் வீதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.