செம்மணி தொடர்பில் அரசின் தீர்மானம்: ஐ.நா உயர்ஸ்தானிகரின் புதைகுழி அவதானிப்பு ‘நுழைவாயிலுக்கு வெளியிலிருந்து’

இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் உயர் பதவியிலுள்ள மனித உரிமைகள் உத்தியோகத்தருக்கு வடக்கில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழிகளை பார்வையிடும் வாய்ப்பானது, இறுதித்தருணம் வரை அதற்கு இடையூறு செய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்ட வெற்றியளிக்காத திட்டமிடப்பட்ட முயற்சிகளை, காணாமலாக்கப்பட்ட தமிழ் மக்களின் உறவினர்களால் நீதிமன்ற நடவடிக்கை மூலம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரே கிடைத்துள்ளது.

குற்றமொன்று நிகழ்ந்த இடமாக இனங்காணப்பட்டு நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் உள்ள புதைகுழி பிரதேசத்திற்குள் நுழைவதற்கு நீதவானின் அனுமதி அவசியமாகும். ஐக்கிய நாடுகள் பிரதிநிதிக்காக அந்த அனுமதியைப் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது மாத்திரமல்ல அதற்கு கடுமையாக இடையூறு விளைவித்த முறைமையையும் தோலுரித்துக் காட்டியமை, நீதிமன்றத்துக்கு நிலைமைகளைக்கூறி வென்றெடுத்த அனுமதியின் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பிரதானியை செம்மணி, சித்துப்பாத்தி மனிதப்புதைகுழிகளைப் பார்வையிட அழைத்துச் சென்ற நாட்டின் முதன்மையான மனித உரிமைகள் சட்டத்தரணிகள் குழாம் ஆகும்.

யாழ்ப்பாண நீதவான் ஏ.ஏ. ஆனந்தராஜா இந்த அனுமதியை வழங்கியபோது ‘நுழைவாயிலுக்கு வெளியிலிருந்து உயர்ஸ்தானிகர் புதைகுழியை பார்வையிடலாம்’ என்பது அரசாங்கத்தின் தீர்மானம் என அறிவித்து அரசாங்கம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை வருகைக்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் செம்மணி மனிதப் புதைகுழி வளாகத்துக்குள் நுழைவதற்கும் பிரதேச மக்களுடன் உரையாடுவதற்கும் வோல்கர் டர்க்கிற்கு ‘வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பதாக’ கூறியிருந்தார். எனினும் அதற்காக எந்தவிதமான சட்டரீதியான அல்லது நிர்வாக மட்டத்திலான திட்டங்களை மேற்கொண்டதாக அமைச்சர் தெளிவுபடுத்தியிருக்கவில்லை.

இலங்கைக்கு மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு வருகைத் தந்திருந்த உலக மனித உரிமைகள் பிரமுகர் நாட்டுக்கு வந்திறங்கி இரண்டு நாட்கள் கடந்த பின்பும் அவர் சார்பில் யாழ்ப்பாணத்தின் செம்மணி, சித்துப்பாத்தி பாரிய மனிதப் புதைகுழிகளை கண்காணிப்பதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என தற்போது தெரியவந்துள்ளது.

அதுமாத்திரமன்றி, உயர்ஸ்தானிகர் கண்காணிப்புக்காக நுழைவதற்குத் தேவையான நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கு பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்குக்கூட அரசாங்கம் திட்டமிட்ட அடிப்படையில் இடையூறு விளைவித்த முறையை மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கன நிலையம் (CHRD) வெளிப்படுத்தியுள்ளது.

“இது ஒரு திடீரென்று செய்யப்பட்ட ஒரு விடயமல்ல,” என பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல்கொடுக்கும் சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் ஜூன் 25ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து குற்றஞ்சாட்டினார்.

உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்கு யாழ்ப்பாணம் செம்மணி, சித்துப்பாத்தி பாரிய மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அரசாங்கம் அதற்காகப் பாடுபட்டவர்களையும் தடுப்பதற்கு பிரயத்தனம் மேற்கோண்ட முறையையும் CHRD நிறைவேற்றுப பணிப்பாளர் விபரித்தார்.

“உயர்ஸ்ரானிகர் செம்மணிக்கு வருவதற்கு ராஜதந்திர மட்டத்தில் மட்டுமல்ல, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியையும் பெறப்பட வேண்டும். ஏனென்றால் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு ஆராய்ச்சி என்பது யாழ்ப்பாண நீதவானால் நேரடியாக அவருடைய மேற்பார்வையில், நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெறுகிறது. அங்கு நடைபெறும் எல்லா விடயங்களும்-அதாவது, நிபுணர்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட விற்பன்னர்கள், களத்தில் இருப்பவர்கள், பொலிஸ்-இவர்கள் எல்லோரையும் மேற்பார்வை செய்வது நீதவான் நீதிமன்றம்தான். எனவே அவருடைய நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியைக்கோர வேண்டும் என்கிற விடயம் சம்பந்தப்பட்ட பலருக்கும் தெரிந்திருந்தது. அதனால் இது நிச்சயமாக அரச தரப்பிலிருந்து செய்யப்பட்டிருக்க வேண்டும். தாங்களே செய்வதாக வாக்களித்து (வாக்குறுதி) விட்டு, ஆனால் நேற்று (ஜூன் 24) வரைக்கும் அதனை-அந்த நீதிமன்றத்துக்கு செய்ய வேண்டிய விண்ணப்பத்தை தாங்கள் செய்யாதது மாத்திரமல்ல, செய்ய இருப்பவர்களையும் தடுத்து விட்டார்கள்.”

சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் ஊடகவியலாளர்களுக்கு அறிவித்ததன் அமைய உயரஸ்தானிகர் வோல்கர் டர்க்கிற்கு பாரிய மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவதற்கான அனுமதியை பெறுவதற்கான இயலுமை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகக் குரல்கொடுக்கும் சட்டத்தரணிகளின் தலையீடு மூலமாகவே சாத்தியமாகியுள்ளது.

“எனவே பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக இது வரைக்கும் நாங்கள் சட்டத்தரணிகளாக இந்த விடயத்தை தாங்களே கையிலெடுத்து இந்த விண்ணப்பத்தை செய்திருந்தோம். ஏனென்றால் இது அரச தரப்பிலிருந்து வர வேண்டிய ஒரு விடயம். அவர்கள் தாங்கள்தான் செய்ய வேண்டும் என தீர்மானித்துவிட்டு, பிறகு கடைசி நிமிடத்தில் எவரையும் செய்யக்கூடாது என்ற ஒரு அடிப்படையில் அவர்கள் இந்த விடயத்தைக் கையாண்டிருந்தார்கள். இது ஒரு முகத்தைக்காட்டிவிட்டு, அதாவது நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வருகை தரலாம் என்ற ஒரு விடயத்தை பொதுவெளியில் சொல்லிவிட்டு, ஆனால் உண்மையில் அதை நடைமுறையில் கடைபிடிக்காமல் அதனை தடுக்கும் விதமாகவே அவர்கள் செயற்பட்டிருந்தார்கள்.”

ஐ.நா. உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள செம்மணி மனிதப் புதைகுழியை ஆய்வு செய்யும் திட்டங்கள் எதையும் ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது நீதி அமைச்சோ இதற்கு முன்னர் அறிவித்திருக்கவில்லை. நீதிமன்றம் மனிதப்புதைகுழியைப் பார்வையிட உயர்ஸ்தானிகருக்கு அனுமதி வழங்கியபோது அவர் மயானத்துக்குள் நுழையக்கூடாது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் என்பதை அறிவித்து பொலிஸார் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக, பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட சட்டத்தரணி கே. எஸ். ரத்னவேல் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

“எங்களை மாத்திரமல்ல பொலிஸ் தரப்பினரையும் மற்றும் சட்ட வைத்திய அதிகாரியையும், மற்றும் காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தையும் நீதிமன்றத்துக்கு வரவழைத்து சம்மதத்தைப் பெற்றுத்தான் இந்த மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி நடக்கும் களத்துக்கு வந்து பார்வையிடுவதற்கான அனுமதியைக் கொடுத்தது. அனுமதி வழங்கப்பட்டபோதும் அத்தருணத்தில் பொலிஸ் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆணையாளர் அவர்கள் இந்த அகழ்வாராய்வு நடக்கும் இந்த செம்மணி புதைகுழிக்கு உள்ளுக்குள் வராமல் வெளியே நின்று, அதாவது நுழைவாயிலுக்கு வெளியில் நின்று அவர்கள் பார்வையிடலாம் என்பதே அரசாங்கத்தின் தீர்மானமாக இருந்தது என பொலிஸ் தரப்பினரால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.”

இலங்கையில் பாரிய மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகளுக்காக சர்வதேச தலையீட்டை முன்மொழிந்து பாதிக்கப்பட்டவர்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் கோரிக்கைகளின் நியாயத்தன்மையை உறுதிப்படுத்தி செம்மணி தொடர்பில் உலகமே ஏற்றுக்கொள்ளும் ஒரு மனித உரிமைகள் உத்தியோகத்தருகடன் அரசாங்கம் பாராமுகமாக நடந்துகொண்ட முறையை சட்டத்தரணி ரத்னவேல் ‘மனித உரிமைகளுக்கு செய்த அவமானம்’ என வர்ணிக்கிறார்.

“அவரை நுழைவாயிலுக்கு வெளியே நிறுத்தி வைத்துவிட்டு தூரத்தில் இருந்து பார்க்குமாறு கூறுவது சரியல்ல. அவர் ஒரு இராஜதந்திரி. அதாவது, உலக நாடுகள் அனைத்தும் அங்கம் வகிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி. அவர் ஓர் உயர்மட்ட இராஜதந்திரியாக கருதப்படுகின்றார். ஒரு அரச தலைவருக்கான மரியாதை அவருக்கு தரப்பட்டிருக்கிறது. அவர் தொடர்பில் நாங்கள் எந்த விதத்திலும் நாங்கள் இவ்வாறான ஒரு அணுகுமுறையை செய்தால் அது அவருக்கு செய்யும் அவமரியாதையாக மாத்திரமல்ல உலக மனித உரிமைகள் விடயத்திலும் பாராமுகமாக இருப்பதாக, அல்லது அவதூறு செய்வதாக அமையும்’ என்ற கருத்தில் நாம் எங்கள் வாதத்தை முன்வைத்தோம். அதன்படி நீதவான் அனுமதி வழங்கினார்.”

ஜூன் 25ஆம் திகதி, யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி மற்றும் சித்துப்பாத்தி மனிதப் புதைகுழிகளை ஆய்வு செய்த வொல்கர் டர்க் உள்ளிட்ட ஐ.நா. பிரதிநிதிகளுடன் CHRD சட்டத்தரணிகள் மற்றும் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தின் (OMP) உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர்.

எவ்வாறாயினும், பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அஙகு நுழைவதைத் தடை செய்யும் நீதிமன்ற உத்தரவைப் பெற்றிருந்த பொலிஸார் அகழ்வாராய்ச்சி நடைபெறும் களத்தில் ஐ.நா. பிரதிநிதியின் செயற்பாடுகள் குறித்து செய்தி வெளியிட ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை.

ஜூன் 25ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அருகே கருத்து தெரிவித்த ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வொல்கர் டர்க், மனிதப் புதைகுழிகள் பற்றிய உண்மையை வெளிக்கொணர்வதற்கு தடயவியல் தொடர்பில் நிபுணத்துவம் உள்ள சுயாதீன நிபுணர்களின் தலைமையில் விரிவான, வலுவான விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

“விசாரணைகள் சர்வதேச தரநிர்ணயங்களுக்கு ஏற்ப பாரபட்சமற்ற முறையிலும் முழுமையாகவும் நடத்தப்பட வேண்டும். நாடு முழுவதும் ஏராளமான பாரிய மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன,” என்ற வொல்கர் டர்க்கின் கூற்றை இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகம் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் தொகுக்கும் புதிய அறிக்கை செப்டெம்பரில் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc