அண்மைக்காலமாக இலங்கையில் இஸ்ரேலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்வது முஸ்லிம் சமூகத்திடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் தோற்றுவித்துள்ளது.
கொழும்பில் இஸ்ரேலிய சபாத் இல்லம் அருகே சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாகவும் தனது கையடக்கத் தொலைபேசியில் இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கரை வைத்திருந்ததாகக் கூறியும் மாவனெல்லையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எட்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு இன்னும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளமை முஸ்லிம் சமூகத்தை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதற்கு முன்னராக, இஸ்ரேலுக்கு எதிரான ஸ்டிக்கரை ஒட்டிய குற்றச்சாட்டில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞரான ருஷ்தி, பல்வேறு அழுத்தங்களுக்குப் பின்னரே நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த கைதுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் கடும் ஆட்சேபனையை வெளியிட்டிருந்தது. முஸ்லிம்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இந்தக் கைது தொடர்பில் ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்களை வழங்கியிருந்தனர். உள்ளூராட்சித் தேர்தல் அண்மித்த நிலையில், முஸ்லிம் சமூகத்தின் எதிர்ப்பை சம்பாதிக்கக் கூடாது என்பதற்காக ருஷ்தி அவசர அவசரமாக விடுவிக்கப்பட்டார்.
எனினும் அதற்கு பல மாதங்களுக்கு முன்னராகவே இதே போன்றதொரு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு மாவனெல்லை இளைஞர் சுஹைல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் கடந்த வாரம் மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தனது முகநூலில் பகிர்ந்த தகவல் மூலமாகவே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
இவ்வாறான கைதுகள் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் அச்சத்தையும், பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளன. அரசாங்கம் இந்த நாட்டில் உள்ள சட்டவிரோத இஸ்ரேலிய மத தலங்களைப் பாதுகாப்பதற்கு வழங்கும் முக்கியத்துவத்தை, தனது சொந்தப் பிரஜைகளின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் காண்பிக்கவில்லை என்ற விமர்சனத்தை இந்த சம்பவங்கள் உண்மைப்படுத்துவதாக உள்ளன.
ஈஸ்டர் தாக்குதலின் போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டபோது பல வழக்கறிஞர்கள் முன்வந்து அவர்களுக்கு உதவினர். குறித்த தாக்குதலுடன் சம்பந்தப்படாதவர்களை முடியுமான அளவு விரைவாக விடுவிப்பதற்கு கூட்டாக இணைந்து செயற்பட்டனர். ஆனால் தற்போது இவ்வாறான கைதுகளின்போது பாதிக்கப்படும் அப்பாவி இளைஞர்களுக்கு உதவ யாரும் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுஹைல் விவகாரத்தில் அவரது குடும்பத்தினர் யாரைச் சந்திப்பது? சட்ட உதவிகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தெரியாமலேயே கடந்த 8 மாதங்களைக் கடத்தியுள்ளனர். இந்நிலையில்தான் இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளை உடனுக்குடன் ஆவணப்படுத்தி, அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான விசேட பொறிமுறை ஒன்று அவசியமாகிறது. இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் கவுன்சில், சூறா சபை உள்ளிட்ட சிவில் அமைப்புகள் கூட்டாக இணைந்து செயற்படுவது பொருத்தமானதாகும். முஸ்லிம் சட்டத்தரணிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடி தேசிய முஸ்லிம் மனித உரிமை நிறுவனம் ஒன்றை ஸ்தாபிப்பது காலத்தின் தேவையாகும்.
முஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் முஸ்லிம் சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இந்த விடயத்தில் விரைந்து செயற்பட்டு சமூகத்தைப் பாதுகாக்கவும் பாதிக்கப்படும் அப்பாவிகளுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்த விரும்புகிறோம்.