பாலநாதன் சதீசன்
ஒட்டுசுட்டான் நகரை அண்டியபகுதியில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமயானக்காணி மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த காணிகளை விடுவிக்க அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்படுமென ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரால் இதன்போது உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 03.07.2025நேற்று இடம்பெற்றநிலையிலேயே இந்தவிடயம் தொடர்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
ஒட்டுசுட்டானில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25ஏக்கர் காணிகளையும், அதனோடு இணைந்த பொது மயானத்தையும் இராணுவத்தினர் அபகரித்துள்ளனர்.
இந்நிலையில் ஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள மக்கள் இறந்தவர்களின் உடலங்களை பேராறு பொதுமயானத்திற்கு நீண்டதூரம் கொண்டுசெல்லவேண்டிய அவலநிலை காணப்படுகின்றது.
இவ்வாறாக பலவழிகளிலும் மாறி மாறி வரும் அரசாங்கங்கள் எமது மக்களை தொடர்ந்தும் துன்பப்படுத்துகின்ற நிலமைகளே காணப்படுகின்றன.
இந்த நிலமை மாற்றப்படவேண்டும். உடனடியாக ஒட்டுசுட்டான் நகர் பகுதியை அண்மித்துள்ள இராணுவமுகாம் அகற்றப்பட்டு பொதுமயானக்காணி உடனடியாக விடுவிக்கப்படுவதுடன், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25ஏக்கர் காணிகளும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார்.
இதன்போது நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர் இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,
ஒட்டுசுட்டான் சந்திப் பகுதியில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர்.
அந்தவகையில் தற்போது ஒட்டுசுட்டானில் இயங்கிவரும் நீர்ப்பாசன பிரிவு அலுவலகம் விவசாயத் திணைக்களத்திற்குரிய காணியிலேயே அமைக்கப்பட்டு இயங்கிவருகின்றது.
குறிப்பாக முன்னாள் முல்லைத்தீவு மாவட்ட பிரதிநீர்ப்பாசனப் பணிப்பாளர் சிறீஸ்கந்தராசா குறித்த நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய காணி விடுவிப்பு விடயத்தில் அதிக அக்கறையுடன் செயற்பட்டார்.
அந்தவகையில் தற்போது ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள நீர்ப்பாசனத் திணைக்கள பிரிவு அலுவலகம் அமைக்கப்படுவதற்கு முன்னர், உரிய இராணுவ அதிகாரிகளுடன்பேசி பிரதானவீதியுடன் அமைந்துள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய 25ஏக்கர் காணிகளிலிருந்து முதற்கட்டமாக இரண்டு ஏக்கர் காணிகளையாவது விடுவித்துத் தரும்படிகோரியிருந்தார்.
இவ்வாறாக கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அந்த நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இராணுவத்தின் பிடியிலுள்ள பொதுமயானக்காணி மற்றும், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய காணி என்பன அரசாங்கத்தால் விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென ஒட்டுசுட்டான் பிரதேசஅபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரால் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.