அரசற்ற ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமானது அடிப்படையில் உள்நாட்டுத் தன்மை வாய்ந்ததாயினும், போராட்டத்திற்கான கட்டுமானமானது பெரிதும் வெளிநாட்டுப் பரிமாணங்களைக் கொண்டது. மிகச் சரியான துல்லியமான வெளிநாட்டு பார்வையின்றி, சர்வதேசப் பார்வையின்றி மேற்படி வகையிலான ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை வெற்றிக்குரியதாக்குவது சாத்தியமில்லை.
இந்த வகையில் அடிப்படையிலும் அடிப்படையாக அரசு, வெளிநாடு, சர்வதேசம் பற்றிய ஒரு கணிப்பீடு போராடும் ஈழத் தமிழர் மத்தியில் சரிவர அமைய வேண்டும். பொதுவாக தமிழீழப் போராட்டத்தை முன்னெடுக்கும் பல்வேறு சக்திகள் மத்தியில் அதற்கான கணிப்பீடு மிகவும் பலவீனமாகவுள்ளது. ஈழத் தமிழர் மத்தியில் புராண, இதிகாச காப்பியக் கலாசாரங்களின் பின்னணியினாலான தூய்மைவாதமும், கற்பனாவாதக் கருத்தோட்டமும், சிந்தனைப் போக்கும் மேலோங்கியுள்ளன.
யதார்த்தத்திற்குப் புறம்பான நடைமுறைக்கொவ்வாத இத்தகைய கருத்து மண்டலத்துள் சிக்குண்டு இரத்தமும் தசையுமான நவீன சர்வதேச அரசியலை மனவேகக் கற்பனைகளினால் தலையிற் தூக்கிக் காலிற் போட்டுடைக்கும் ஒரு பரிதாபகரமான போக்கைத் தமிழரசியல் கொண்டுள்ளது.
அந்த வகையில் அரசு, வெளிநாடு, சர்வதேசம், சர்வதேச அரசுகள் அல்லது வெளிநாட்டு அரசுகள் என்பன பற்றிய ஓர் அறிவார்ந்த கணிப்பீட்டைச் செய்யும் முயற்சியாக இக்கட்டுரை அமைகிறது.
ஐ.நா. சபைக்கான அங்கத்துவ அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட 196 முழு அரசுகள் இந்த பூமியில் உள்ளன. தனக்கென சொந்த அரசமைத்து, அரசுடன் கூடிய தேசிய விடுதலைக்காகப் போராடும் அரசற்ற ஈழத்தமிழ்த் தேசிய இனம், மேற்படி அரசுகள் நிறைந்த இந்தவுலகில், அவ்வாறு காணப்படும் அரசுகளைக் கையாளும் வித்தையைச் சரிவரக் கையிலெடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு முன் நிபந்தனையாக அரசுகள் பற்றிய அடிப்படை இயல்பை, அதற்குரிய செயல்பாட்டை, அதற்கான யதார்த்தத்தை சரிவர எடை போட்டு அதற்கேற்ப அவற்றைக் கையாள வேண்டும். அரசை முடியரசு, மக்கள் அரசு, அந்நிய அரசு, இன ஆதிக்க அரசு, தன்னின அரசு, 21 ஆம் நூற்றாண்டுக்குரிய பூகோள வளர்ச்சிக்குட்பட்ட அரசு என அவை அவற்றுக்குரிய பரிமாண வேறுபாடுகளைக் கருத்திற் கொள்ளும் அதேவேளை, “அரசு” என்ற நிறுவனத்திற்கு இருக்கக்கூடிய பொது இயல்பை அடிப்படையாகக் கொண்டு அரச நடத்தைகளையும் அவை மேற்கொள்ளும் அரசுகளுக்கிடையேயான உறவுகளையும் சீர்தூக்கி அணுகவும், கையாளவும் வேண்டும். இவற்றை யதார்த்தபூர்வமான நடைமுறைச் சாத்தியத்திற்குரிய விஞ்ஞானபூர்வமான அணுகுமுறைக்கப்பால் விருப்பங்களினாலோ, இலட்சிய வேட்கைகளினாலோ, தூய எண்ணங்களினாலோ அணுக முற்பட்டால் அழிவுகளைத்தான் தலையில் சுமக்கவேண்டி வரும்.
ஆதலால் முதலில் இங்கு “அரசு” பற்றிய அதன் நிறுவனத் தன்மையை விருப்பு வெறுப்புகளுக்கு இடமின்றி, நடைமுறை சார்ந்த வகையில், அதற்கேயுரிய விஞ்ஞானபூர்வ அளவீட்டுடன் எடை போடுவோம். ஒரு தேசிய இனப்பிரச்சினை என்பது எப்பொழுதும் ஒரு சர்வதேச பிரச்சனையாகும். எந்தவொரு தேசிய இனப் பிரச்சினையும் சர்வதேச கண்கொண்டுதான் பார்க்கப்பட வேண்டும். அதனைச் சர்வதேச பரிமாணங்களுக்கூடாகத்தான் அணுக வேண்டும். ஆதலால் தேசிய யுகத்தில் ஒரு தேசிய இனப்பிரச்சினை என்பது ஒருபோதும் வெறும் உள்நாட்டுப் பிரச்சனையல்ல அது ஒரு சர்வதேசப் பரிமாணம் கொண்ட பிரச்சனையாகும்.
ஜெறிமி பென்தாம் (Jeremy Bentham) என்பவரால் எழுதப்பட்டு 1789 ஆம் ஆண்டு வெளிவந்த “An Introduction to the Principles of Morals and Legislation” என்ற நூலிற்தான் “சர்வதேசம் “– “International ” என்ற பதம் முதன்முறையாக பிரயோகிக்கப்பட்டது. அதாவது புவிப்பரப்பில் முதன்முறையாக தேசியப் புரட்சிகள் தோன்றியதையடுத்து இப்பதம் பிரயோகத்திற்கு வந்தது. அதாவது 1776 ஆம் ஆண்டு அமெரிக்க விடுதலையும் 1789 ஆம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியும் நிகழ்ந்த பின்னணியிற் தேசிய அரசுகள் உருவாகவே தேசங்களுக்கிடையேயான உறவுகள் என்ற அர்த்தத்தில் சர்வதேசம் ஏற்ற பதப் பிரயோகம் பிறக்க வேண்டிய வரலாற்றுத் தேவை ஏற்பட்டது.
அதாவது நாடுகளுக்கிடையேயான அல்லது அரசுகளுக்கிடையேயான உறவுகள் என்பன புவிப்பரபில் அரசுகள் தோன்றியதை உடனடுத்த காலத்திலேயே (சுமாராக கிமு 2500 ஆண்டுகளை ஒட்டி) தோன்றியுள்ளன. ஆனால் சர்வதேச உறவுகள் என்பது கிபி 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தேசிய அரசுகள் தோன்றியதைத் தொடர்ந்தே தோன்றின.
ஆனால் நடைமுறையில் தேசங்களுக்கிடையேயான உறவுகள் என்று சொல்வதை விடவும், அரசுகளுக்கிடையேயான உறவுகளாகவே அவை மேலோங்கியுள்ளன. தேசியம், சர்வதேசம் என்பன அரச கட்டமைப்பின் மீது கட்டி எழுப்பப்பட்டுள்ளதால் அரசவாதமே பலம்பொருந்தியதாயுள்ளது.
‘அரசு’ என்பது அதிகார மையத்தை குறிக்கும். இத்தகைய அதிகார மையங்கள் நீர்வாழ், நிலம் வாழ் பிராணிகள், மனிதப் பிராணி, பறவைகள் வரை ஏதோ ஒரு வகையில் ஆங்காங்கே உள்ளன. உதாரணமாக யானைக் கூட்டத்திற்கு முன்மாதிரி யானை அல்லது தலைவி யானை (The matriarch ), என்ற பெண் தலைமைத்துவமுண்டு. சிங்கக் கூட்டத்திற்கு மேலாண்மை ஆண் சிங்கம் (The dominant male) என்ற ஆண் தலைமைத்துவமுண்டு. சிம்பன்சிக் ( chimpanzee) கூட்டத்திற்கு The Alpha male என்ற ஆண் தலைமைத்துவமுண்டு. அப்படியே குரங்குக் கூட்டத்திற்கும் The Alpha male என்ற ஆண் தலைமைத்து உண்டு. கடல்வாழ் உயிரினங்களில் ஆர்காஸ் திமிங்கிலத்திற்கு (Orcas -Killer Whales) matriarch என்று அழைக்கப்படும் மூத்த பெண் திமிங்கலத்தின் பெண் தலைமைத்துவமுண்டு.
அவ்வாறே பறவைகளில் வானில் பறக்கும் பறவைக் கூட்டங்களுக்கு நிரந்தரமற்ற ஆனால் அவ்வப்போது பறக்கும்போது வழிகாட்டுகின்ற, உணவை அடையாளம் காண்கின்ற கூட்டுத் தலைமைத்துவம் இருக்கும். இத்தலைமைத்துவம் அவ்வப்போதய திறமையின், வல்லமையின், ஆளுமையின் அடிப்படையில் அமையும். இப்படியே வான்கோழி, கோழி என்பனவற்றின் மத்தியிலும் தலைமைத்துவம் உண்டு.
இந்த வகையில் அரசு என்பது பொதுவான உயிர் வாழ்தலில் மிகக் குறிப்பாக மனித வாழ்வில் வாழ்வை ஒழுங்குபடுத்துவதில் வளங்களைத் திரட்டுவதில் முகாமைத்துவங்களை மேற்கொள்வதில் இயற்கை மற்றும் அனர்த்தங்களில் மனித ஆதிக்கங்களிலிருந்து பாதுகாப்பதற்கு அரசு என்ற நிறுவனம் வரலாற்றில் எப்போதும் இன்றியமையாததாய் இருக்கிறது. அதற்காக அரசு என்பது ஒரு தூய்மையான, புனிதமான, மகிமைக்குரிய நிறுவனமல்ல. அரசு என்ற நிறுவனத்தின் இன்றியமையாமையை ஒருபுறமும் அது புனிதமானதல்ல என்பதை மறுபுறமுமென ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகப் புரிந்து கொள்வதிலிருந்து அரசை அணுக வேண்டும்.
அரசானது அதிகாரத்தை உயிர் மூச்சாகக் கொண்டது. அது தன் அதிகாரத்தால் ஒன்றை அணைத்தும் பெறவல்லது அல்லது அடித்தும் பெறவல்லது. கூடவே ஒன்றை அழித்தும் பெறவல்லது. பெறுதல் மட்டுமே இலட்சியம் ஒன்றைப் பெறுதலே குறிக்கோள். அதன் நலன் அல்லது தேவையே அதன் இலக்கு. அதில் மகிமை, தூய்மை என்ற எதுவும் இருக்காது. தன் தேவையை அடைவதற்கான வழிவகைகள் எதுவோ, அதுவே அதற்கு நியாயம். அது கூறும் நியாயமும், நீதியும் அதற்குரிய நலம் சார்ந்த பக்கத்திலிருந்தே இருந்தே எழும்.
சிங்கம், புலி என்பனவற்றிற்கு மாமிசம் தேவை. அந்த இலக்கை அடைவதற்கான வழிவகைகள் நடைமுறையில் அதற்குப் புனிதமானவை.
இவ்வகையில் அரசானது தனது தேவைக்காக எத்தகைய அநியாயங்களையும், புனிதப் பிரசங்கங்களினாலும், புனித வார்த்தைகளினாலும் பூசை செய்து அலங்கரிக்கும்.
அது தன் இலக்கை அடைவதற்கு எதிரிகளை வெற்றி கொள்வதையே மூல மந்திரமாய்க் கொண்டிருக்கும். ” “வெற்றி.”… “வெற்றி” ….” வெற்றி” இதுவே அதன் மூல உச்சாடனமும், ஒரே இலக்கும். அதிகாரத்தை உயர்ந்த நிலையில் வைத்துக் கொண்டு எதிரியை அணைத்து வெற்றி பெற வேண்டுமோ அவ்வாறு வெற்றி பெறுவது அதன் முதல் முயற்சி. அந்த வழி. சாத்திய மில்லையெனில் எதிரியை அடித்து வீழ்த்தி வெற்றியீட்டி இலக்கை அடை.
அது தனது நலனுக்காக, தனது வெற்றிக்காக எதையும் பலியிடவும் தவறாது. ஹிட்லரின் நாசீச ஜெர்மன் அரசும் தூய ஆரியவாத லட்சியத்தை முன்வைத்து தன்சொந்த இனமக்களையும், மனித குலத்தையும் பலியிட்டது. அதற்கு தேசபக்தி என்றும் பெயர் சூட்டுவார்கள், தியாகம், அர்ப்பணிப்பு என்றும் புனிதமாய் ஆவாகனப்படுத்துவார்கள்.
அரச இயந்திரம் ஆடை அணிவதில்லை. ஆதலால் அதற்கு வெட்கமில்லை. அரச இயந்திரத்திற்கு இதயமில்லை; ஆதலால் அதற்கு இரக்கமுமில்லை. அதற்கு ஒன்றே ஒன்று உண்டு. அது அதற்கான நலன், நலனின் அடிப்படையிலான தேவைகள், தேவையை நிறைவேற்றுவதற்கான வழிவகைகள், அந்தவழி வகைகளை நியாயம் என்று புனிதப்படுத்தும் மாந்திரீக வித்தை. அதன்படி தமது தேவைகளை நீதி என்றும் தேவைகளை அடைவதற்கான வழிவகைகளை நியாயம் என்றும் போற்றி முன்னெடுப்பார்கள். அதாவது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை சிங்கள அரசும், அது சார்ந்த நிறுவனங்களும், கட்சிகளும், ஆட்சியாளர்களும் எவ்வித வெட்கமும்,கூச்சமும், தயக்கமுமின்றி நியாயப்படுத்துவதான மாந்திரீக உச்சாடனங்களைச் செய்வது போல.
அரசு என்பது வெட்டும், கொத்தும், குத்தும் கொல்லும் சிறை வைக்கும் உபகரணங்களாலான ஓர் ஒடுக்குமுறை இயந்திரம். அதிகாரத்திற்கான அணிகலன்களாக இரத்த உறவு, இரத்த பாசம் போன்ற அணிகலன்களை அது அணிந்திருந்தாலும் இயல்பில் அது இரத்தம் குடிக்கும் ஓர் இயந்திரமாகும். அதிகார வேட்கை வந்துவிட்டால் தாய் – பிள்ளை, தந்தை– மகன், அண்ணன்– தம்பி, சகோதரன் – சகோதரி, மச்சான்- மாமன் என்ற அனைத்து வகை இரத்த பாசங்களையும் கடந்து அது இரத்தம் குடிக்கும். இயல்பில் அது இரத்தம் குடிக்கும் அரச இயந்திரம்.
கடதாசிப் பூச்சோடனையால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஆனால் அந்தக் கடதாசிப் பூ சோடனைக்குள் குத்தும், வெட்டும் கூரிய கருவிகளும், நச்சுக் குவளைகளுமிருக்கும். ஆதலால் அரசை அதற்கே உரிய இயல்பிற்கூடாக மொழி, மத – இன பந்த பாசங்களையும் கடந்து அதிகாரத்தை உயிர்மூச்சாகக் கொண்ட ஓர் இயந்திரமாகப் பார்க்கப்பட வேண்டும். அரசு, கொடைகளைப் பற்றியும், தானங்களைப் பற்றியும், தர்மங்களைப் பற்றியும் பேசலாம். அவை கூட அதிகாரத்திற்கான முலாம்களே தவிர, வேறில்லை. தன்னரசோ,அயலரசோ, பிற அரசுகளோ தங்கக் குவளைகளில் பாலை வார்த்து தாம்பாளங்களில் பரிவுடன் நீட்டும், என்று ஒரு போதும் நினைக்கவோ, பார்க்கவோ கூடாது. அரசுகள் அரச நலன் சார்ந்து தத்தம் தேவைகளுக்கும், தாம் முகங்கொடுக்கும் நெருக்கடிகளுக்கும் ஏற்ப தற்காப்புடன் செயல்படும். இதனைப் புரிந்து கொண்டால் எந்தொரு அரசிடமும் எவரும் தானதர்மக் கண்கொண்டோ கொடை வள்ளல் நினைப்புடனோ எதனையும் எதிர்பார்க்காது யதார்த்தத்தின் பின்னணியிலான யதார்த்த நிர்ணயக் கண்கொண்டு நடைமுறைக்குச் சாத்தியமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள முடியும்.
இது விடயத்தில் ஜனநாயக அரசுகள், சோசலிச அரசுகள், மத தர்ம புனித அரசுகள் என அனைத்துமே ஒரே மாதிரியானவை. மேற்படி அனைத்து வகை அரசுகளிடமும் தத்தம் நலன் சார்ந்த ஒரே ஒரு இலட்சிய வெட்டும் வாள்களும், குத்தும் ஈட்டிகளுமேயுண்டு. ஆதலால் எல்லா விதத் தர்மங்களுக்குமப்பால் அவரவர் நலன் சார்ந்த யதார்த்தம் என்ற ஒரேயொரு அளவுகோலால் நடைமுறைக்குப் பொருத்தமான வகையில் தனக்குத் தேவையான பகுதிகளையளந்து துண்டுபோட்டு எடுக்க வேண்டும்.
மேற்படி இவ்வாறு காணப்படும் அரசு சார் உண்மைகளையும், யதார்த்தங்களையும் தத்தமக்கு பொருத்தமாக அணுகத் தெரியாமல் “அந்த அரசு ஏமாற்றி விட்டது”, ” இந்த அரசு துரோகம் செய்துவிட்டது” என்று ஒப்பாரி வைப்பதில் அர்த்தமில்லை.
நெருப்பு என்றால் சுடும்; சிங்கம் என்றால் அது பசுவைக் கொன்று தின்னும்; புலி என்றால் அது பசித்தாலும் புல்லுத் தின்னாது; சிங்கத்துக்கு மான் பூமாலை போட்டுப் பொற்கிண்ணத்தில் பால் வார்த்து விருந்து வைத்தாலும் சிங்கத்துக்கு விருந்து மானே தவிர பாலும், பூ மாலையுமல்ல. ஆதலால் இவ்வாறு அரசியலில் அதனை அதுவாக அணுக வேண்டுமே தவிர மனோரஞ்சன தூயகற்பனாவாத மந்த புத்திகளாலல்ல.
இன அழிப்புவாத அரசு எல்லா புண்ணியங்களையும் கடந்து இன அழிப்பைச் செய்யும். தர்ம உபதேசம் அதற்கு பொருந்தாது. மாறாக அந்த அரசிடம் இருந்து தப்பி தற்காப்பதற்கான திறனே தேவை. நீதி, புனிதம் என்பனவற்றின் பேரிலான ஒப்பாரியல்ல. புலிக்கு இலட்சியம் மாமிசம். புலிக்குப் பலம் அதன் பல்லும், நகமும், வேட்டைத் திறனும். மானுக்குப் பலம் பாய்ந்து நீண்ட தூரம் ஓடவல்ல கால்களும் அதன் உடல்வாகும். புலி மானைவிட வேகமாக 100 மீட்டர் தொலைவுக்கு மட்டுந்தான் ஓடும். ஆனால் மான் குறையாத ஒரே அளவு வேகத்தில் நான்கு கிலோ மீட்டர் வரை ஓடும். அப்படி என்றால் மானுக்கு சவால் 100 மீட்டர் வரை தாக்குப் பிடிப்பதுதான்.
இயல்பில் புலிக்கொரு பலமிருக்கு. அதேபோன்று மானுக்கு இன்னொரு பலமுண்டு. தத்தம் பலத்தையறிந்து அதனைப் பயன்படுத்துவதுதான் புத்திசாலித்தனம், சாதுரியம், வீரம். தன் பலம் அறிந்தவனே வீர தீரசூரன். அவனே உண்மையில் சான்றோனாவான்.
” உன்னையே நீ அறிவாயாக” என்கின்ற தத்துவம் இதைத்தான் சொல்கிறது. இதனை சோக்ரடீஸ் கூறியதாகப் பலரும் தவறாகச் சொல்கிறார்கள். சோக்ரடீசுக்கு முன்னமே கிரேக்க அப்பலோ தேவதையின் ஆலயத்தில் இந்த வசனம் எழுதப்பட்டுள்ளது. சோக்ரடீஸ் இதற்கு உன்னதமான வியாக்கியானம் அளித்ததன் மூலம் இதன் உரிமையாளராக சோக்ரடீஸ் கூறப்படுகிறார்.
இந்த வாக்கியத்தைக் கூறியவர் யார் என்றே தெரியாது. இது மிகவும் மகத்துவமானதொரு வாக்கியம். சோக்ரடீஸ் இந்த வாக்கியத்திற்குத் தொட்டப்பாவானார். ஆனால் ஒரு மகானால், ஒரு தத்துவ ஞானியாலீ இது வியாக்கியானப்படுத்தப்பட்டு முன்னிலைப்படுத்தப்பட்டதால் அதன் மகத்துவம் இன்னும் அதிகமாகவே உள்ளது. அதுவும் நல்லதே.
வெற்றிக் கனிகளைப் பெறுவதென்பது அவனவன் பலத்தை அவனவன் உணர்ந்து அதற்குரிய இடங்களில் அவற்றைப் பிரயோகிப்பதிலேயே உள்ளது. “உன்னையே நீ அறிவாயாக” என்ற கூற்று இதனையே போதிக்கின்றது. திருவள்ளுவரும் இதனைப் பற்றிப்பல இடங்களில் பலவாறு கூறியுள்ளார்.
புல்லுண்ணியான மான் மாமிச உண்ணியான புலிக்குப் போதிக்க கூடாது. அது எப்படி போதித்தாலும் போதிக்கும் மானையே உண்ணும். மானுக்குப் புலி எதிரியேயானாலும் புலிக்கு மான் உயிர் மூச்சு. ஆதலால் முதலில் மான் தன்னிலை உணர்ந்து தற்காத்து முன்னேற வேண்டும். அதாவது மான் முதலில் தன் பெறுமானத்தை உணரவேண்டும், நாலு கிலோ மீட்டர் தூரம் வேகமாக ஓடக்கூடிய தனது பலத்தையுணர வேண்டும். புலிக்கு முன்னால் 100 மீட்டர் தூரத்துக்கு மட்டும் இருக்கக்கூடிய தனது பலவீனத்தை உணர வேண்டும். அதைச் சரிவர கையாண்டால் மானால் புலியை வெல்ல முடியும். வெற்றிதான் வாழ்வை நிர்ணயிக்குமே தவிர பலியாவது அல்ல.
சிங்கம், புலி என்பனவற்றிடமிருந்து மான் அவற்றிலிருந்து விலகிச் செல்லும். அதேவேளை சிங்கம், புலி போன்றவற்றிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள அந்த மான் பபூன் குரங்கை அண்டி வாழும். அதாவது வேட்டைப் பிராணிகளைக் கண்டால் பபூன் குரங்கு மர உச்சியிலிருந்து எச்சரிக்கை ஒலி எழுப்புவதால் அதன் நிழலிற் தானும் நன்மையடைய பபூன் குரங்கை அண்டி மான் வாழும். இப்படி மானைப் போல பாதகமானவற்றிலிருந்து விலகிப் போவதும் சாதகமானவற்றுடன் அண்டி வாழ்வதும் போன்ற உறவு நிலைகளும், இயல்புகளும் அரசுகளை அணுகுவதும், கையாளுவதுமான உறவு நிலை உலகளாவிய அரசியல் யதார்த்தத்திலுண்டு.
தான் வாழும் ஓர் அரசுக்குள் அரசை கையாள்வது என்பது ஒரு முறை. மற்றைய அரசுகளைக் கையாளுவது என்பது இன்னொரு முறை. ஈழத் தமிழர்கள் ஒடுக்கும் அரசுக்குட்பட்டிருப்பதினால் அந்த அரசை தமது பகை அரசாகவே கொள்வர். அதேவேளை ஒடுக்கும் அந்த அரசுக்கு ஏனய அரசுகளுடன் நட்புறவிருக்கும் வகையில் ஒடுக்கப்படும் இனத்திற்கு உள்ளும் ,புறமும் அரசுகளைக் கையாளுவது என்பது மிகவும் கடினமான காரியம். ஆதலால் அதிகம் செழிப்பான, நெகிழ்ச்சித் தன்மையான, மிகவும் சமயோசிதமான வகையிற்தான் ஒடுக்கப்படும் இனம் வெளிநாடுகளை, வெளியரசுகளை அணுகவும், கையாளவும் வேண்டும். இதில் கடும் போக்குகளுக்கிடமில்லை. அதிக நட்புக்களை வளர்க்க வேண்டுமென்றால் அதிக நெகிழ்ச்சித் தன்மைகளைக் கடைப்பிடித்தாக வேண்டும்.
உறவுகளைக் கட்டமைப்பதில் இயல்பாகவே ஒவ்வொரு பிராணியும், ஒவ்வொரு மனிதனும் தெளிவான சுயநலமும், தன்னலமும் சார்ந்த அணுகுமுறைகளையுமே கொண்டவை. மனித உயிரின் அதி உயர் அதிகார பீடமான அரசுகளும் முற்றிலும் மேற்படி சுயநலம் கொண்டவைகளே.
உதாரணமாக மனிதன் போற்றும் தெய்வீகக் காதல் கூட முற்றிலும் சுயநலம் கொண்டதே. காதல் பற்றிய பின்வரும் தத்துவக் கூற்றை நோக்குவோம். அதாவது ஒருவன் ஒரு பெண் மீது தீராக்காதல் கொண்டு அலைகிறான். அப்போது அவன் அவளிடம் தன் தீராக் காதலைப் பற்றி கூறுகையில் அவள் மீது தான் அளவற்ற அன்பும், பாசமும், காதலும் கொண்டுள்ளதாகக் கூறுகிறான்.
அதற்கு அவள் பின்பறுமாறு பதில் சொல்வதாக அந்தக் கூற்று அமைகிறது :
“நீ என்னை காதலிக்கவில்லை. ஆனால் என்னில் உன்னைக் காதலிக்கின்றாய்” (” You don’t love me but you love yourself in me”). அதாவது நீ என் மீது உனது நலனைத் தேடுவதைத்தான் நீ என்னைக் காதலிப்பதாகச் சொல்லு என்பதே பொருளாகும். இது இருவருக்கும், இருபாலாருக்கும் பொருந்தும். அதாவது தெய்வீக காதல் என்று போற்றப்படும் அந்தக் காதல் கூட பரஸ்பர சுய நலனிற்தான் தங்கியுள்ளது. அப்படியென்றால் அரசுகளுடனான உறவுகள், நாடுகளுடனான உறவுகள் என்பவற்றில் இரு தரப்பு நலன்கள் இன்றி அவை ஒருபோதும் அமைய முடியாது. அதாவது ஓர் அரசுடன் உறவு கொள்ள வேண்டுமென்றால் அந்த அரசு எதிர்பார்க்கும் தேவைகளையும் கருத்திற் கொண்டாக வேண்டும். அதாவது கொடுக்கல் – வாங்கல் என்ற இரண்டையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகக் கொண்டவைதான் உறவுகள்.
இந்தக் கொடுக்கல், வாங்கல் சார்ந்த உறவானது யதார்த்த சூழல்களுக்கு பொருத்தமாகக் கையாளப்பட வேண்டியதாகும்.இந்த வகையிற் இரத்தமும், தசையுமான அரச இயந்திர இயல்பையும், அதற்குரிய உயிரோட்டமான நடைமுறைகளையும் பரஸ்பர நலனின்றி அரசுகளுக்கு இடையேயான உறவுகள் இருக்க முடியாது என்பதையும் ஒருபுறம் புரிந்து கொள்ளும் அதேவேளை நெருக்கடிகளின் மத்தியில் அரசுகள் குடைசாய்க்க கூடியவை என்பதையும் கருத்திலெடுத்து உள்ளும், புறமும் அரசுகளுக்கிடையேயான உறவுகளைக் கையாள வேண்டும்.
அரசு என்பது அரச இயந்திரம் மட்டுமல்ல, மக்கள் யுகத்தில் அந்த அரச இயந்திரத்தை அந்த அரசுக்கு உள்ளும், புறமும் மக்கள் எழுச்சிகளால், பலம் வாய்ந்த மக்கள் சாதனங்களால் சுற்றி வளைக்க இடமுண்டு. அரசு சுயநலம் கொண்ட நிறுவனம் என்ற வகையில் அரசு மேற்படி நெருக்கடிகளினால் நிர்பந்திக்கப்படும் போது, சுயநலம் கொண்ட நிறுவனமான அரசு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்படும் போது, அது தனது இறுக்கமான பிடியிலிருந்து தளர்ந்து நெகிழ்ச்சியான முடிவுகளுக்கு உள்ளாக முடியும். இந்த வகையிற் உள்நாட்டு, வெளிநாட்டு அரச இயந்திரங்களை மக்கள் சார்ந்த நலன்களுக்கு அல்லது விடுதலைப் போராட்டங்கள் சார்ந்த நலன்களுக்கு தலை சாய்க்க வைக்கலாம். அது புவியியல் மற்றும் யதார்த்தம் சார்ந்த சூழல்களுக்குட்பட்டது. இவற்றை தெளிவான புரிதல்களுக்கூடாகவும், வாய்ப்புகளைக் கையாளும் வித்தைகளுக்குள்ளாலும் அணுக வேண்டும். இவை எவற்றிலும் மனோரம்ய விருப்பங்களுக்கு இடமில்லை.
யதார்த்த சூழலில் பொருத்தமான நடைமுறை சார்ந்த சிந்தனைக்கும், செயற்பாட்டுக்குமே இடமுண்டு. அண்டப் பிரபஞ்சத்தில் “எதுவுமே தன்னிச்சையானவையல்ல” -” No free will ” .அனைத்துமே நிபந்தனைக்குட்பட்டவை என்ற விஞ்ஞானி ஐன்ஸ்டைன் ( Einstein) கூறிய கூற்று பிராணிகள், மனித நடத்தைகள், அரசியல் ஆகிய அனைத்துக்கும் பொதுவான அடிப்படை உண்மையாகும். இந்த வகையிற் ஈழத்தமிழ் மக்கள் தமது அரசியல் எதிர்காலத்தைச் சூழல் சார்ந்த நிபந்தனைகளுக்குள்ளாகப் புரிந்துகொண்டு மேம்பாடான தீர்மானங்களை எடுத்து முன்னேற வேண்டும்