உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் சிறுபான்மையினருக்கு எதிராக பயன்படுத்தப்படுவதாக பரவலாக விமர்சிக்கப்படும் பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மொஹமட் ஷுஹைலை உடனடியாக விடுவிக்கவும், பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யவும் கோரி, இன்றைய தினம் (ஜூலை 15) கல்கிசை நீதிமன்றத்தின் முன்பாக பலஸ்தீன ஒற்றுமை இயக்கம் மௌனப் போராட்டத்தை ஆரம்பித்த சில மணி நேரங்களுக்குப் பின்னர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
“இஸ்ரேலை திருப்திப்படுத்த அரசாங்கம் இஸ்ரேலியர்களுக்கு எதிரானவர்களை சிறையில் அடைக்கிறது” என எழுதப்பட்ட பதாகைகளை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்ததை காண முடிந்தது.
சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன தனது வாடிக்கையாளருக்கு பிணை வழங்குமாறு கல்கிசை நீதவானுக்கு கடிதம் ஊடாக அறிவித்ததாக, மாவனல்லையைச் சேர்ந்த 21 வயது மொஹமட் ஷுஹைலின் சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி பிரதிபா கீத்ம பெர்னாண்டோ தெரிவிக்கின்றார்.
இதற்கமைய, மொஹமட் ஷுஹைலை தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் கிராம சேவையாளரின் சான்றிதழ் ஆகியவற்றின் அடிப்படையில் விடுவிக்க ககல்கிஸ்ஸை மேலதிக நீதவான் ஹேமாலி ஹால்பந்தெனிய உத்தரவிட்டதாக அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
மாவனல்லையைச் சேர்ந்த விமானப் பணியாளர் பாடநெறி மாணவரான 21 வயது மொஹமட் ஷுஹைல் மொஹமட் ரிபாய், தனது சமூக ஊடகக் கணக்கில் இஸ்ரேலுக்கு எதிரான எமோஜியை வெளியிட்டதாகக் கூறி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து ஒக்டோபர் 24, 2024 அன்று கைது செய்தனர்.
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஒன்பது மாதத்திற்கு முன்னர் முஸ்லிம் இளைஞரை கைது செய்த தெஹிவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அனுராத ஹேரத் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஷுஹைல் எவ்வித குற்றத்தையும் இழைக்கவில்லை என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவராததால், அவரை பிணையில் விடுவிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக தெஹிவளை பொலிஸார் 2025 மே 27 ஆம் திகதி அறிக்கை தயாரித்து சட்டப் பிரிவுக்கும், சட்டமா அதிபருக்கும் அனுப்பி சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ள சூழ்நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபருக்கு சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி பிணை வழங்க நீதவான் நீதிமன்றத்தால் முடியாது என கல்கிஸ்ஸை மேலதிக நீதவான் ஹேமாலி ஹால்பந்தெனிய தெஹிவளை பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக எந்தக் குற்றமும் கண்டறியப்படாவிட்டால், சட்டப் பிரிவு மூலம் சட்டமா அதிபருக்குத் தெரிவிக்குமாறு தெஹிவளை பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதவான், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய தான் செயல்படுவதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார்.
இதங்கமைய, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி விராஜ் தயாரத்னவால் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய மொஹமட் ஷுஹைலை இன்றைய தினம் (ஜூலை 15) கல்கிசை நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.
பயங்கரவாத குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தும்போது ‘நியாயமான சந்தேகத்தின்’ தரநிலை குறித்து சட்டமா அதிபருடன் கலந்தாலோசித்து தெளிவான வழிகாட்டுதல்களை வகுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் பதில் பொலிஸ்மா அதிபருக்கு அண்மையில் பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.