ஒன்பது மாதங்களுக்கு முன்னர் தன்னைக் கைது செய்தபோது 5000 ரூபா தந்தால் உடன் விடுவிப்பதாக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தன்னிடம் கூறியதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்ட மாவனெல்லையைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் முகமட் சுஹைல் தெரிவித்துள்ளார். அச்சமயம் தன்னிடம் ஆயிரம் ரூபா பணமே இருந்ததாகவும் அதனைக் கொடுக்க முற்பட்ட போது அவர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் சுஹைல் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தெஹிவளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் பேஸ்புக் வழியாக அவர் வெளியிட்ட காணொளி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“நான் தெஹிவளையில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்த போது என்னை அழைத்த பொலிசார் எங்கு போகிறாய் எனக் கேட்டனர். நான் தங்கியிருப்பதற்கு வீடு ஒன்றைத் தேடிச் செல்வதாகக் குறிப்பிட்டேன். எனது அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டனர். நான் அப்போது அடையாள அட்டையை எடுத்து வந்திருக்கவில்லை எனக் கூறினேன். உடனடியாக வீட்டுக்குத் தொடர்பு கொண்டு அடையாள அட்டையின் புகைப்படத்தை அனுப்புமாறு கேட்டேன். வீட்டில் அடையாள அட்டையை உடன் கண்டுபிடிக்க முடியாததால் எனது கடவுச் சீட்டின் புகைப்படத்தை அனுப்பினார்கள். அதனை பொலிசாருக்கு காண்பித்தேன். அப்போது பொலிசார் எனது கையடக்கத் தொலைபேசியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்களை பார்வையிட்டார்கள். அதன்போது இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் விவகாரம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தன. நான் விமான போக்குவரத்து துறையில் கல்வி கற்பதால் விமானங்களின் படங்களும் எனது தொலைபேசியில் இருந்தன.
இவ்வாறு என்னை அந்த இடத்தில் தடுத்து வைத்திருந்த சமயம் அந்த இடத்தில் இருந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க பொலிஸ் அதிகாரி ஒருவர் 5000 ரூபா பணம் தந்தால் உன்னை இப்போது விடுவிப்பேன் எனக் கூறினார். என்னிடம் அப்போது அவ்வளவு பணம் இருக்கவில்லை. வீட்டிலிருந்து 2000 ரூபா அளவிலேயே நான் பணத்தை எடுத்து வந்திருந்தேன். செலவுகள் போக அந்த நேரத்தில் 1000 ரூபா அளவிலேயே மீதமிருந்தது. அதனைத் தருவதாக நான் கூறிய போதிலும் அவர் இணங்கவில்லை. அதன் பின்னரே என்னை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று என்னை பொலிஸ் நிலைய சிறைக் கூண்டினுள் அடைத்தனர்” என்றும் சுஹைல் தெரிவித்துள்ளார்.
தனது விடுதலைக்காக முன்வந்து செயற்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் முஹீத் ஜீரான் உட்பட சட்டத்தரணிகள் மற்றும் குரல் கொடுத்த அனைவருக்கும் தான் நன்றி தெரிவிப்பதாகவும் சுஹைல் இதன்போது குறிப்பிட்டார்.