(எம்.ஆர்.எம்.வசீம்)
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் நீதியை பெற்றுக்கொடுக்கப்போவதில்லை. அரசாங்கத்தின் விசாரணைகளிலும் திருப்தியில்லை. அதிகாரத்துக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலை கோட்டாபய ராஜபக் ஷ பயன்படுத்தியதைவிட இரண்டு மடங்கு இந்த அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ஹெட்டர் அப்புஹாமி தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை மறைக்க முற்படும் எவருக்கும் இந்த நாட்டில் நிம்மதியாக வாழக்கிடைக்காது. அதிகாரத்தில் இருப்பதற்கும் அதிர்ஷ்டம் கிடைக்காது. அரசாங்கத்துக்கும் அதனையே தெரிவிக்கிறேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மறைத்தால், அதற்கான பிரதிபலனை இயற்கை வழங்கும். அது நடந்தே தீரும். இந்த அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் என நான் ஒருபோதும் நம்பமாட்டேன். அரசாங்கம் இதுதொடர்பில் மேற்கொள்ளும் விசாரணைகள் தொடர்பில் நான் துளியளவேனும் திருப்தியடைவதில்லை. அது தொடர்பில் நான் நம்பிக்கை வைப்பதும் இல்லை. ஏனெனில் இவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தை மிகவும் கீழ்த்தரமாகவே பயன்படுத்தி வந்தார்கள். கோட்டாபய ராஜபக்ஷ்வும் இந்த தாக்குதல் சம்பவத்தை மிகவும் மோசமான முறையில் பயன்படுத்தி வந்தார். கோட்டாயப ராஜபக்ஷ்வுக்கு தொடர்ந்து அதிகாரத்தில் இருக்க முடியவில்லை.
அதேபோன்று இவர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தை கோட்டாபய ராஜபக்ஷ்வைவிட இரண்டு மடங்கு பயன்படுத்தினார்கள். கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கும் இவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தை பயன்படுத்தி வந்தார்கள். தேர்தல் இடம்பெறுவதற்கு முன்னர், ஏப்ரல் 21ஆம் திகதிக்கு முன்னர் இந்த தாக்குதல் தொடர்பில் நல்ல அறிவிப்பை தெரிவிப்பதாக தெரிவித்தார்கள். பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுடனே அரசாங்கம் விளையாடி வருகிறது. அரசாங்கத்தின் இந்த விளையாட்டு வினையாகுவதற்கு நீண்டம் காலம் இல்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் நீதியை பெற்றுக்கொடுக்கப்போவதில்லை. அவ்வாறு நீதியை பெற்றுக்கொடுக்காமல் அரசாங்கத்துக்கு முன்னுக்கு செல்லவும் முடியாது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளே விசாரிக்க வேண்டி இருப்பது சவாலான விடயம் என ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தி நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டிய அதிகாரமுடைய நாட்டின் தலைவரே இவ்வாறு தெரிவிப்பதாக இருந்தால், அதற்குமேல் இதுதொடர்பில் எதுவும் இடம்பெறுவதில்லை என்பதே அதன் அர்த்தம். அதனால் இந்த அதிகாரத்தால் எந்த பயனும் இல்லை. இந்த தாக்குதல் விசாரணை தொடர்பில் அரசாங்கத்துக்குள்ளே முரண்பாடான கருத்துக்கள் எழுகின்றன. விசாரணைக்காக அரசாங்கம் யாரை நியமித்துக்கொண்டாலும் பரவாயில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதே எங்களுக்கு தேவை என்றார்.