வர்த்தமானியை இரத்து செய்யாமல் 'வாயால் விடுவிக்கப்பட்ட' வடக்கின் காணிக்குள் நுழைய தமிழர்களுக்குத் தடை

யாழ். மாவட்டத்தின் வலிகாமம் பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பரம்பரை காணிகளை அரசாங்கம் விடுவித்ததாக தற்போதைய ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதிகளும் தெரிவித்த அறிக்கைகள் வெறும் 'அரசியல் வாக்குறுதிகள்' என்பது தெரியவந்துள்ளது.

12  வருடங்களுக்கு முன்னர் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கையகப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் இதுவரை இரத்து செய்யவில்லை எனவும், அந்த காணிகளில் நுழையும் உரிமையை தொடர்ந்து கட்டுப்படுத்தி வருவதாகவும், வலிகாமம் பகுதியில் உள்ள காணிகளுக்கு உரிமை கோரும் மக்களும், சிவில் சமூக ஆர்வலரும் யாழ்ப்பாணத்தில் ஒரு ஊடக சந்திப்பை நடத்தி வெளிப்படுத்தியுள்ளனர்.

லங்கை அரசாங்கம் கையகப்படுத்திய தமது பரம்பரை காணியை விடுவிக்கக் கோரி,யாழ். வலிகாமத்தில் காணியை இழந்த 100ற்கும் மேற்பட்டோர், ஜூலை 15 ஆம் திகதி காலை ஜனாதிபதி செயலகம் அருகே அமைதி போராட்டத்தை நடத்தினர்.

சிவில் சமூகக் குழுக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தின் முக்கிய முழக்கம் 'எங்கள் முன்னோர் காணியை எங்களுக்குத் திருப்பித் தா' என்பதாகும்.

போராட்டத்தில் இணைந்த வலிகாமம் பகுதியைச் சேர்ந்த நிலமற்ற மக்கள், ஜூலை 21ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனை சந்தித்து, தமது காணியை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.

மாவட்டச் செயலாளருடனான கலந்துரையாடல்களுக்குப் பின்னர், யாழ்ப்பாணத்தில் ஊடகச் சந்திப்பை நடத்திய வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணை அமைப்பாளர் யாட்சன் பிகிராடோ, தமிழ் மக்களின் 6,000 ஏக்கருக்கும் அதிகமான காணியை கையகப்படுத்தி 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் இன்னும் இரத்து செய்யவில்லை என்பதை வெளிப்படுத்தினார்.

"2013 மே 28 அன்று வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது 6,317 ஏக்கர் காணி. இந்த கெசட் நடைமுறையில் இருக்கும்போது கடந்த காலத்தில் இங்கு வரும் ஜனாதிபதிகள், தற்போதைய ஜனாதிபதியாக இருக்கலாம் நாங்கள் காணி 200 ஏக்கரை விடுவிக்கின்றோம், 300 ஏக்கரை விடுவிக்கின்றோம், பாதையை திறந்திருக்கின்றோம் எனச் சொல்வது அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டவை அல்ல. இந்த கெசட் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. காணிகள் விடுவிக்கப்பட்டாலும் அவை சட்ட ரீதியாக இன்னமும் விடுவிக்கப்படவில்லை என்பதை நாங்கள் ஜனாதிபதி செயலக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தியதோடு மாவட்ட செயலாளருக்கும் இந்த விடயத்தை தெளிவுபடுத்தினோம்."

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவிக் காலத்தில், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 1812/10ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை, மே 28, 2013 அன்று வெளியிட்ட அப்போதைய காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர், பொது நோக்கத்திற்காக காணி அவசியம் எனக் கூறி, வலிகாம் பகுதியில் ஆறாயிரம் ஏக்கருக்கும் அதிகமான காணியை கையகப்படுத்தப்படுவதாக அறிவித்தார்.

“கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்கத் தேவைக்கு வேண்டியதாய் இருக்கின்றதென்றும் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படுமென்றும் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் ஆகிய நான் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.”

கையகப்படுத்தப்பட வேண்டிய காணியின் அளவு சிங்களம் மற்றும் தமிழில் 6,371 ஏக்கர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, எனினும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் நிலம் 6,317 ஏக்கர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

"வட மாகாணத்தில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில், வலிகாமம் வடக்கு , வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில், காங்கேசன்துறை மேற்கு, காங்கேசன்துறை மத்தி, வீமன்காமம் தெற்கு, தையிட்டி தெற்கு, பலாலி தெற்கு, ஒட்டாபுலம், வளலாய் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள, நில அளவையாளர் நாயகத்தினால் தயாரிக்கப்பட்ட

2013.04.24 ஆம் திகதிய வைஏ/ரீஎல்எல்/2013/111 ஆம் இலக்க முதற்சுவட்டு வரைபடத்தில் துண்டு இல. 1 தொடக்கம் 72 வரை காட்டப்பட்ட சுமார் 2,578.4475 ஹெக்டயhர்ஸ் (6,371 ஏக்கர், 01 றூட், 15 பேர்ச்சஸ்) முழு விஸ்தீரணமுடைய கீழ் விபரிக்கப்பட்ட எல்லைகளுள் அமைந்த காணித்துண்டு: வடக்கு: இந்து சமுத்திரம்; கிழக்கு: மண்ணினால் அமைக்கப்பட்ட அணைக்கரை; தெற்கு: மண்ணினால் அமைக்கப்பட்ட அணைக்கரை; மேற்கு: இலங்கைத் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான காணி, சீமெந்துக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணி மற்றும் மண்ணினால் அமைக்கப்பட்ட அணைக்கரை."

ஜூலை 15 அன்று, ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நடைபெற்ற அமைதிப் போராட்டத்திற்குப் பின்னர், ஜனாதிபதி செயலகத்தின் செயலாளரை சந்தித்ததாகவும், குறைந்தபட்சம் பல ஆண்டுகளாக காணி உரிமைக்காக போராடி வரும் தனது கிராமத்தின் பெயரைக்கூட அதிகாரிகள் அறிந்திருக்கவில்லை என, ஜூலை 21ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட வலிகாமம் வடக்கு காணி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜோசப் அல்பர்ட் அலோசியஸ் தெரிவித்தார்.

"வலி வடக்கு என்ற ஒரு இடம் இருப்பதே ஜனாதிபதி செயலகத்தின் செயலாளருக்கு தெரியாமல் இருக்கிறது. இங்கு எங்களிடமிருந்து அரச அதிகாரிகள் கவனயீனமாக அறிவிக்கவில்லையோ, அல்லது வேண்டுமென்றோ தெரியாது. ஆவணங்களை அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. அவர்களுக்கு வலி வடக்கு யாழ்ப்பாணத்தில் எங்கே இருக்கு? என்ன பிரச்சினை என்பது தெரியாது. 2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டும் அது அவர்களுக்குத் தெரியவில்லை. அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை."

2013 ஆம் ஆண்டு அதிவிசேட வர்த்தமானி மூலம் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட தமிழ் மக்களின் 6,000 ஏக்கருக்கும் அதிகமான காணியில், 2,800 ஏக்கரைத் தவிர, மீதமுள்ளவை அவ்வப்போது விடுவிக்கப்பட்டுள்ளன, ஆனால் நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட வர்த்தமானி இன்னும் இரத்து செய்யப்படாததால், விடுவிக்கப்பட்ட காணிகளும் இன்றுவரை அரச காணிகளாகவே உள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

"6300 ஏக்கர் காணியில் 2800 ஏக்கர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. விடுவிக்கப்பட்ட காணியும் அரச காணியாகவே இருக்கிறது. வர்த்தமானி அறிவித்தல் சட்ட ரீதியாக விடுவிக்கப்படும் வரையில் அந்த காணி அனைத்தும் அரச காணியாகவே இருக்கும். அந்த வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்பட வேண்டும். எங்களுடைய தனியார் காணி விடுவிக்கப்பட வேண்டும்.."

அத்தகைய சூழ்நிலையில் தமது காணிக்குள் நுழைந்து குறைந்தபட்சம் விவசாயத்தில் ஈடுபடுவதுகூட சாத்தியமில்லை எனக் கூறும், ஜோசப் அல்பர்ட் அலோசியஸ், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் கூட காணிப் பிரச்சினைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை என வலியுறுத்தினார்

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc