55 of 83 கொடூர இனவழிப்பைத் தொடர்ந்து தமிழர்கள் மீது கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை ஆரம்பித்துள்ள சிங்களப் பேரிவாதம்

விஜயரத்தினம் சரவணன்

கடந்தகாலத்தில் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட கொடூர இனவழிப்பினைமேற்கொண்ட சிங்களப் பேரினவாதம், தற்போது தமிழர்கள் மீது கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச்செயற்பாட்டைக் கட்டவிழ்த்துவிட்டிருப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே கடந்த காலத்தில் சிங்களப் பேரினவாதத்தின் திட்டமிட்ட தமிழ் இனவழிப்பிற்கும், மனிதப் புதைகுழிகள் விவகாரத்திற்கும், தற்போதைய கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகளுக்கும் பன்னாடுகள் தலையீடு செய்து முறையான தீர்வினைப் பெற்றுத்தரவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்இனவழிப்பிற்கு பன்னாட்டு நீதிப்பொறிமுறையூடாக மாத்திரமே நீதி பெற்றுத்தரவேண்டுமென வலியுறுத்தி வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் 26.07.2025இன்று முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு மற்றும் கையெழுத்துச் சேகரிக்கும் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்று கருத்துத்தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையில் தமிழ்மக்கள் நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டுக்கொண்டிருப்பதுடன், அழிக்கப்பட்டுக்கொண்டுமிருக்கின்றனர்.

தற்போது வடகிழக்குத் தமிழர் தாயகப்பரப்பில்  எங்குபார்த்தாலும் மனிதப்புதைகுழிகள் இனங்காணப்படுகின்ற நிலமைகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் இந்த மனிதப் புதைகுழி விவகாரங்கள் பன்னாட்டுப் பொறிமுறையில் அகழ்வாய்வுசெய்யப்படுவதுடன், இந்த மனிதப் புதைகுழி விவகாரங்களுக்கு பன்னாட்டு நீதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டுமென்பதே எமது தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

தற்போது எமது தமிழ் மக்களுடைய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. அண்மையில் வவுனியா வடக்கில் தமிழர்களின் பழந்தமிழ் கிராமங்களில் ஒன்றான வெடிவைத்தகல்லில் திரிவச்சகுளம் பகுதியில் மகாவலி அதிகாரசபையால் ஆக்கிரமிப்புச் செயற்பாடுகள் மிகத் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருப்பதை நேரில் சென்று பார்வையிட்டு, அந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை உரிய்தரப்பினருக்குத் தெரியப்படுத்தி அந்த ஆக்கிரமிப்புச்செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தியிருக்கின்றோம்.

இவ்வாறாகத் தொடர்ச்சியாக எமது தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த இடங்களையெல்லாம் அபகரித்து பெரும்பான்மையினக் குடியேற்றங்களை மேற்கொண்டு இனவாத அரசு எமது தமிழ்க்களை அடக்கி ஒடுக்கவேண்டும் என்ற சிந்தனையுடன் செயற்படுகின்றது.

இந்நிலையில் தற்போது ஆட்சிப்பொறுப்பேற்றிருக்கின்ற இந்த அரசாங்கம் இதற்கான ஒரு நியாயத்தை வழங்குமென்ற நிலையில் எமது தமிழ்மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

நிச்சயமாக்தமிழ் மக்களுக்கு உள்ளக விசாரணைகள்மீது தமிழ்மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

தமிழர் தாயகப்பரப்பில் இனங்காணப்படுகின்ற மனிதப்புதைகுழிகள் தொடர்பில் இனவாதத்தை வெளிப்படுத்தும் விதமாக மிக மோசமானவகையில் பெரும்பான்மைஇனத்தைச் சார்ந்த இனவாதிகள் கருத்துக்களை முன்வைத்துவருவதை அவதானிக்கக்கூடியவாறுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனிதப்புதைகுழியில் சிறிய பிஞ்சுக்குழந்தைகளின் எலும்புக்கூட்டத்தொகுதிகள்கூட இனங்காணப்படுகின்றன. இதன்மூலம் கடந்தகால இனவாத அரசுகள் எவ்வாறாக திட்டமிட்டவகையிலான மிகக் கொடூரமான தமிழ் இன அழிப்புச் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளன என்பதை நன்கு உணரக்கூடியதாகவிருக்கின்றது.

எனவே இந்த கொடூரமான திட்டமிட்ட இனவழிப்புச் செயற்பாடுகளுக்கு பன்னாட்டு விசாரணையூடாக நீதியைக் கோருகின்றோம். எனவே பன்னாடுகள், பன்னாட்டு மனிதஉரிமை அமைப்புக்கள், திட்டமிட்ட இவ்வாறான தமிழ் இன அழிப்பிற்கு நீதியைப் பெற்றுத்தருமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்தகாலத்தில் எமது தமிழ் மக்கள்மீது இவ்வாறாக மேற்கொள்ளப்பட்ட  திட்டமிடப்பட்ட கொடூரமான இனவழிப்புச் செயற்பாடு இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. அந்தவகையில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீது தற்போது கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச்செயற்பாடு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. எமது தமிழ் மக்களின் பூர்வீகநிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதுடன், எந்தவித நிலத்தொடர்புமற்றவகையில் விகாரைகள் அமைக்கப்பட்டு மதத் திணிப்புச் செயற்பாடுகள் தீவிரம்பெற்று வருகின்றன. இவ்வாறாக தமிழ் மக்கள் மீது கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இதையெல்லாம் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல் பன்னாடுகள் தமிழ்மக்களுக்கானதொரு தீர்வினைப் பெற்றுத்தர முன்வரவேண்டும்.

பலஸ்தீனத்தின் தீர்வுதொடர்பில் பேசும் பன்னாடுகள், இலங்கைத் தமிழர்களது தீர்வுதொடர்பில் கவனம்செலுத்தாமைக்கான காரணமென்ன? இலங்கை அரசாங்கத்தைக்கண்டும், இனவாதிகளைக்கண்டும் அஞ்சுகின்றீர்களா எனக் கேட்டுக்கொள்ளவிரும்புகின்றேன்.

தயவுசெய்து ஈழத்தமிழர்கள் விடயத்தில் பன்னாடுகள் கரிசனையுடன் செயற்படவேண்டும். ஈழத்தமிழர்களாகியநாம் நியாயமான கோரிக்கைகளைத்தவிர வேறு எதனையும் கேட்கப்போவதில்லை.

வடக்கு கிழக்கென்பது தமிழர்களின் பூர்வீகதாயகமாகும். இந்த வடக்கு கிழக்கை ஈழத்தமிழர்களான நாம் முழுமையாக ஆட்சி செய்வதற்கான பொறிமுறையொன்றினை ஏற்படுத்தி, ஈழத்தமிழர்களிடம் வடக்குக்கிழக்கை ஒப்படையுங்கள் என்றுதான் கேட்கின்றோம்.

அத்தோடு தமிழர் தாயகப்பரப்பில் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழிகளுக்கு நியாயம் கிடைக்கவேண்டும்.  பிஞ்சுக் குழந்தைகள்கூட ஆயுதம் ஏந்தினார்களா எதற்காக அவர்கள் கொடூரமாகப் படுகொலைசெய்யப்பட்டுப் புதைக்கப்பட்டனர். பாடசாலைப் புத்தகப்பயுடன் சிறார்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பதும் தற்போது அம்பலமாகியிருக்கின்றது. இத்தகைய கொடூரர்களிடமிருந்து எம்மை பன்னாடுகள் காப்பாற்றவேண்டும். முறையான பன்னாட்டு நீதிவிசாரணை வேண்டுமென்பதை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc