"ஈழத்து கலை இலக்கியத் துறை மற்றும் திரைப்படத்துறை ஆகியவற்றிலும் எழுத்துத்துறையிலும் நன்கு அறியப்பெற்றவராக விளங்கிய வண்ணம் கலை இலக்கியத்துறையில் பன்முக ஆற்றல் கொண்டவராக விளங்கும் 'சோக்கல்லோ' சண்முகம் அவர்களின் வெற்றியின் இரகசியம் அவரது இளமைக் காலம் என்று நான் அறிந்தவரையில் இங்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். அவர் தனது பதின்ம வயதிலிருந்தே சவால் நிறைந்ததும் துயரங்கள் படிந்ததுமான வாழ்க்கையை எதிர் கொண்டார். ஆனால் அவ்வாறான தடைகளை தனக்குரிய ஓர்மத்தோடு தகர்த்தெறிந்து தனது வாழ்க்கையில் பல துறைகளில் முன்னேற்றம் கண்டவர். அவ்வாறான ஒருவர் எனது உறவினர் என்பதில் நான் பெருமையடைகின்றேன்"
இவ்வாறு தற்போது கனடாவில் தனது 90 அகவையை அடைந்துள்ள சோக்கல்லோ' சண்முகம் என்னும் கலைஞரின் 90வது அகவைப்(நவதி விழா) பெருவிழாவில் அவரது உறவினரான ஞானாம்பிகை திருச்செல்வம் பாராட்டுரை வழங்கும் போது தெரிவித்தார்.
கடந்த 02-08-2025 சனிக்கிழமையன்று ஸ்காபுறோவில் அமைந்துள்ள 'மல்வேர்ன் சன சமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்ற இந்த அற்புதமான விழாவிற்கு ';தமிழகன்' மதியழகன் அவர்கள் தலைமை தாங்கினார். ஏழாலை மக்கள் நலன்புரிச் சங்கத்தினரால் நடத்தப்பெற்ற இந்த விழாவில் பல்துறை சார்ந்தவர்கள் உரையாற்றினார்கள்.
'சோக்கல்லோ' சண்முகம் என்னும் கலைஞரின் 90வது அகவைப்(நவதி விழா) பெருவிழாவில் அவரது உறவினரான ஞானாம்பிகை திருச்செல்வம் அவர்கள் தனது உரையில் தொடர்ந்து " முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்ற கூற்றுக்கு இணங்க எனது சகோதரன் முறையான 'சோக்கல்லோ' சண்முகம் அவர்கள்பல தொழில்களில் இணைந்து படிப்படியாக பலவற்றை சாதித்தவர். அத்துடன் இலங்கைத் தமிழ்ச் சினிமாவிலும் நடித்த அனுபவம் கொண்டவர்" என்றார்.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் பல அமைப்புக்களின் பிரதிநிதிகளும் உரையாற்றினார்கள்.
தனது எண்பதாவது வயதிற்குப் பின்னர் 'சோக்கல்லோ' சண்முகம் அவர்கள் கவிதை இலக்கணத்தைக் கற்றுக் கொண்ட கனடாத் தமிழ்க் கவிஞர்கள் கழகத்தின் சார்பில் தொடர்ந்து கொண்டிருக்கும் கவிதை இலக்கணம் மற்றும் மரபுக் கவிதைகள் பயிலும் வகுப்பில் கற்றவராக அவருக்கு கழகத்தின் சார்பில் தலைவர் குமரகுரு கணபதிப்பிள்ளை அவர்களும் முன்னாள் தலைவர் சண்முகராஜா அவர்களும் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் இணைந்து பாராட்டுப் பத்திரம் ஒன்றை வழங்கினார்கள்
இறுதியில் 'சோக்கல்லோ' சண்முகம் அவர்கள் நன்றியுரையாற்றினார்.