(எம்.ஆர்.எம்.வசீம்)
பலஸ்தீனில் இடம்பெறும் இஸ்ரேல் இராணுவத்தின் இன அழிப்பை கண்டிப்பதுடன் பலஸ்தீன் மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டும் என்றும் பலஸ்தீனம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் இலங்கையின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர்.
பலஸ்தீனை பாதுகாக்கும் தேசிய அமைப்பு கடந்த திங்கட்கிழமை லங்கா கம்யுனிஸ்ட் கட்சி காரியாலயத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.
அங்கு கருத்து தெரிவித்த முஜிபுர் ரஹ்மான் எம்.பி, பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு எதிராக இன்று உலகம்பூராகவும் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இதனை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றன. பலஸ்தீனுக்காக ஆரம்பத்தில் இருந்து குரல்கொடுத்துவரும் இலங்கை தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் இதற்கு முன்னர் பலஸ்தீனுக்காக குரல்கொடுத்துவந்தவர்கள். இன்று ஆட்சிக்கு வந்த பின்னர் இது தொடர்பில் எதுவும் கதைப்பதில்லை. எனவே பலஸ்தீனை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் ஊடாக எமது கண்டன அறிக்கை ஒன்றை இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை காரியாலயத்துக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தற்போதைய அரசாங்கம் தனது வெளிநாட்டு கொள்கைக்கு எதிராகவே செயற்பட்டு வருகிறது. இஸ்ரேல் தொடர்பாக அரசாங்கம் கடைப்பிடித்து வரும் கொள்கையை காணக்கூடியதாக இருக்கிறது. இஸ்ரேல் இனத்தவர்கள் சட்டவிரோதமான முறையில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தடுப்பதற்கு அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது என்றார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குறிப்பிடுகையில், ஹிட்லரின் ஆட்சியில் மனித குலத்துக்கு எதிரான செயற்பாடுகள் கடுமையான முறையில் முன்னெடுக்கப்பட்டன. இருப்பினும் தற்போதைய யுகத்தில் ஹிட்லரின் கொடூரத்தைக் காட்டிலும் பலஸ்தீனத்துக்கு எதிரான கொடுமைகளை இஸ்ரேல் இராணுவம் தொடர்ச்சியாக முன்னெடுக்கிறது.
உணவு தேடிச்செல்லும் பலஸ்தீன சிறுவனர்கள் மற்றும் பெண்கள் மீது தமது இராணுவத்தினர் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் இராணுவத்தின் பிரதானிகள் ஊடகங்களுக்கு குறிப்பிட்டுள்ளார்கள்.
மனித குலத்துக்கு எதிரான இஸ்ரேலின் இந்த மிலேச்சத்தனமான செயற்பாட்டுக்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும். பலஸ்தீனத்துக்கு இலங்கை முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, பலஸ்தீனம் தொடர்பான தமது நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க 2020 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக வலியுறுத்துகிறார்.
அவரது ஆட்சியில் அரச நிதி கட்டமைப்பின் ஊடாக பலஸ்தீனத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் நிதியுதவியளிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் ஆகிய நாடுகள் வேறுபடுத்தப்பட்ட வகையில் நாடாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.இதற்குரிய நடவடிக்கைகளை உலக நாடுகள் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும்.பலஸ்தீனத்தை பாதுகாக்கும் இந்த செயற்பாட்டுக்கு ஐக்கிய தேசியக் கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்றார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதி, பலஸ்தீனம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியான நிலைப்பாட்டில் உள்ளார். பலஸ்தீனத்தின் உரிமை அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை நெருக்கடியான காலத்தில் இருந்து வலியுறுத்துகிறார்.பலஸ்தீனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்களும் கிடையாது. முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.