யாழ்ப்பாணத்தைத் தவிர, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய பகுதிகளில் ஹர்த்தால் வெற்றிகரமாக அமைந்ததாக தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர்கள் இதனை அறிவித்தனர்.
இந்த ஊடகச் சந்திப்பில், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றக் கோரி தமிழரசு கட்சி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், இதற்கு பெரும்பாலான பகுதிகளில் ஆதரவு கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாண நகரப் பகுதியில் மட்டுமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தன. இந்தப் பகுதியில் ஆதரவு கிடைக்காதது மனவருத்தம் அளிப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.
ஹர்த்தால் அறிவிப்பு வெளியான உடனே, ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டோர் தமிழரசு கட்சியைத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதியளித்ததாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.
வவுனியா பிரதேசம் உட்பட சில இடங்களில் வற்புறுத்தலின் பேரில் சில கடைகள் திறந்து வைக்கப்பட்டிருப்பதை, தான் நேரடியாக கவனித்துள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
“சுயமாக மக்கள் முடிவெடுத்து கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுக்கின்ற போது திட்டமிட்ட ரீதியில் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், வவுனியா சந்தை பகுதி முற்று முழுதாக மூடப்பட்டுள்ள நிலையில் எங்களது கோரிக்கையை ஏற்று வியாபார தளங்களை மூடியவர்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம்.
“முஸ்லிம் கடைகள் அனைத்தும் வவுனியா பசார் வீதியில் மூடப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் ஆதரவு கிடைத்துள்ளது.
“போராட்டங்கள் பல விதம். அந்தந்த காலத்திற்கு தேவையான போராட்டத்தை நாம் தெரிவு செய்து நடத்துவோம். உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பருந்தித்துறை நகரசபைத் தலைவர், பருத்தித்துறை நகரில் இருக்கும் இராணுவ முகாம்கள் மூடப்பட வேண்டும். அதற்கு எதிரான போராட்டம் 29ஆம் திகதி நடத்துவதாக அறிவித்துள்ளார். எங்களது பூரண ஆதரவை அதற்கு நாம் வழங்குவோம்.
“மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்பது தான் கோரிக்கையாகவுள்ளது. அனைத்துக் கட்சிகளும் இந்த விடயத்தில் இணைந்து செயற்படுவதாக தான் நான் அறிகிறேன். ஒரு சில அரசியல் கட்சி கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மலையக தமிழ் கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளார்கள்.
“தமிழ் மக்களின் பகுதியில் இராணுவ முகாம் நிறுவப்பட்டு இருப்பதனால் தான் முத்தையன்கட்டு சம்பவம் இடம்பெற்றது. இதற்கா ஒரு அடையாள எதிர்ப்பை செய்துள்ளோம். கிளிநொச்சி நகரத்தில் உள்ள இராணுத்தை அகற்ற அந்தப் பகுதியிலும் பல போராட்டங்கள நடத்துவோம். மற்றவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுப்போம்.
“வர்த்தக சங்க தலைவர் கேட்கும் போராட்ட முறைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. மக்களுடைய அரசியல் தலைவர்கள் நாங்கள் தான். வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சி தான் எல்லா மாவட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே நாம் அதற்கேற்ப செயற்படுவோம்” எனத் தெரிவித்தார்.