கனடா அரசின் பணிக்குத் திரும்பும் உத்தரவை விமானப் பணிப்பெண்கள் தொடர்ந்து மீறி வருவதால், செவ்வாய் பிற்பகல் வரை அனைத்து விமானங்களையும் இடைநிறுத்துவதாக ஏர் கனடா அறிவித்துள்ளது.
செவ்வாயன்று ஏர் கனடா தனது சேவைகளை மீண்டும் தொடங்கும் என நம்புவதாக, அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி இன்று முன்னதாக தெரிவித்திருந்தார்.
கனடிய பொது ஊழியர் சங்கம் (CUPE) தனது வேலைநிறுத்தத்தை இன்னும் திரும்பப் பெறவில்லை. இந்த நடவடிக்கையை ஏர் கனடா சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டுள்ளது.
"எங்களைப் போன்றவர்கள் சிறைக்குச் செல்வதுதான் இதன் விளைவு என்றால், அப்படியே நடக்கட்டும்" என்று CUPE தலைவர் திங்களன்று கூறினார்.
"இந்த உரிமைகளுக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார். மற்றொரு விமான நிறுவனத்தில் டிக்கெட் இல்லாத பயணிகள் விமான நிலையத்திற்கு வரவேண்டாம் என நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவெளை, ஏர் கனடா தலைமை இயக்க அதிகாரி, விமானப் பணிப்பெண்கள் பணிக்குத் திரும்பிய பின்னரே பேச்சுவார்த்தைகளைத் தொடர முடியும் என்று ஏர் கனடா கூறுகிறது. ஆனால், பேச்சுவார்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்படும் வரை சட்டவிரோதமான இந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரப் போவதில்லை என தொழிற்சங்கம் கூறுகிறது.
ஏர் கனடாவின் தலைமை இயக்க அதிகாரி மார்க் நஸ்ர் கூறுகையில், “விமான நிறுவனம், இத்துறையில் ஒரு முன்னோடியான ஒப்பந்தத்தை உருவாக்கத் தயாராக உள்ளது. ஆனால் விமானங்கள் தரையில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அதைச் செய்ய முடியாது” என்றார்.
கனடா தொழிலுறவு சபை (Canada Industrial Relations Board) இந்த வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளதால், கனடிய பொது ஊழியர் சங்கம், விமானப் பணிப்பெண்களை மீண்டும் பணிக்குத் திரும்பும்படி அறிவுறுத்த வேண்டும் என்று நஸ்ர் கூறுகிறார்.
இதேவெளை, "யாரும் இலவசமாக வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது" என்று வேலைவாய்ப்பு அமைச்சர் பேட்டி ஹாஜ்டு கூறுகிறார்.
ஒரு சமூக ஊடகப் பதிவில், நியாயமற்ற வேலை குறித்த குற்றச்சாட்டுகள் "ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்றும், அதனால்தான் இந்தக் குற்றச்சாட்டை நிவர்த்தி செய்ய விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு விசாரணையை மேற்கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
"கனடா தொழிலாளர் சட்டத்தில் (Canada Labour Code) உள்ள ஓட்டைகளை முதலாளிகள் பயன்படுத்தினால், நாங்கள் அவற்றை மூடுவோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.