ஸ்கார்பரோ டவுன் சென்டர் வணிக வளாகத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற 19 வயது இளைஞரின் மரணம், கொலைவழக்காகக் கருதப்படுவதாக Toronto காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை (23) வெளியிட்ட செய்திக்குறிப்பில், பலியானவர் டானியல் அமலதாஸ் (19) என அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வணிக வளாகத்தின் கழிப்பறையில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணையை ஆரம்பித்தனர்.
காவல்துறை இதை Toronto நகரில் இந்த ஆண்டின் 27-ஆவது கொலை என அறிவித்துள்ளது.
இன்னும் அதிகாரப்பூர்வமாக மரணக்காரணம் வெளியிடப்படவில்லை. எனினும், இளைஞர் துப்பாக்கிச்சூட்டில் பலியானவர் என்று ஆரம்ப கட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சந்தேக நபர் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.