தலைவர் அஷ்ரப் முதல் அரசியல் மேடைகளில் மாத்திரம் பேசப்படும் காணிப் பிரச்சினைதான் ஒலுவில் பிரதேச அஷ்ரப் நகர் மற்றும் பொன்னம்வெளி பிரச்சினைகள்.
கடந்த 25 ஆண்டுகளில் எந்த அரசியல் அதிகாரங்களும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பயன்படவில்லை.
ஆனாலும், நிலத்தினை இழந்த, சீவிப்பதற்கு வேறு இடமில்லாத அந்த நலிவுற்ற மக்கள் தங்களுடைய நிலத்தினை மீட்பதற்கான போராட்டத்தினைக் கைவிடவில்லை.
நீதி கோரி இலங்கையில் உள்ள உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதிவான் நீதிமன்றம் என சுமார் 25 வருடங்களாக போராடி வருவதுடன் அவற்றில் பல வழக்குகளில் வெற்றிகண்டும் உள்ளனர். இருந்தபோதிலும் இன்னும் தமது உரிமைகளை சுதந்திரமாக அனுபவிக்க முடியாமல்தான் உள்ளது.
இந்த வகையில் ஒரு அடைவுதான் கடந்த 21 ஆம் திகதி அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாகும்.
அஷ்ரப் நகர் என்பது பல பெயர்களில் அழைக்கப்பட்ட ஒரு அழகிய, வளம்மிக்க கிராமமாகும். இக்கிராமம் காசாங்கேணி, ஆலிமுடகாடு, பள்ளக்காடு, ஆலிம்சேனை என்றும் அஷ்ரஃப் நகர் என்றும் பல பெயர்களில் அடையாளப்படுத்தப்படும் தீகவாபிக்கு அண்மையில் இருக்கும் ஒரு முஸ்லிம் கிராமம்.
சேனைப் பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, நன்னீர் மீன்பிடி, நெல் வேளாண்மை என பல தொழில் வளம்மிக்க கிராமம்.
யுத்த காலப்பகுதியில் பாதிப்புற்ற கிராமமாக இருப்பதுடன் விவசாயத்திற்காக சென்ற 16 பேர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அச்சுறுத்தலாக சில காலம் அம்மக்கள் இடம்பெயர்ந்தும் வாழ்ந்தார்கள்.
யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் 2011ல் இலங்கை இராணுவத்தினர் அக்கிராமத்தில் மக்களுடைய விவசாயத்தையும், இருப்பிடங்களையும் பலவந்தமாக அழித்து முகாம் அமைத்தார்கள். சொல்லொணாத் துயரங்களை ஏற்படுத்தி மக்களை தங்களுடைய பாரம்பரிய காணிகளிலிருந்து அகற்றினர். சுமார் 150 ஏக்கர் அளவிலான நிலம் இதன் மூலம் தடைசெய்யப்பட்டது.
பல அரசியல்வாதிகளிடமும் ஓடிய மக்கள் உச்சநீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஒன்றை இராணுவத்திற்கு எதிராக தாக்கல் செய்தனர்.
08 வருட போராட்டத்தின் பின்னர் இராணுவம் தங்களுடைய வசமிருந்த காணிகளில் சுமார் 39 ஏக்கர் நிலத்தை விடுவித்திருந்தனர். அவ்வாறு விடுவித்த காணிகளை வன பாதுகாப்புத் திணைக்களம் தங்களுக்கு உரித்தான காணி என்று உரிமை கோரி மக்களை உள்ளே செல்லவிடாது தடைசெய்தது.
தங்களுடைய காணிகளை சுத்தம் செய்த அலியார், சுபைதா உம்மா, ஹனிபா, முசாதிக், இஸ்ஸதீன் ஆகியோருக்கு எதிராக வன பாதுகாப்பு அதிகாரிகளால் 2019 இல் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்து வழக்கு தொடரப்பட்டதுடன், காடு பேணுனர் அதிபதியால் வெளியேற்றல் கட்டளையும் இந்த ஐந்து குடும்பஸ்தர்களுக்கும் விடுக்கப்பட்டது.
கட்டளையினை இரத்துச் செய்யக்கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு மேல்நீதிமன்றில் இரண்டு பேருடைய வெளியேற்றல் கட்டளை இரத்துச் செய்யப்பட்டதுடன், நிலத்தினது உத்தரவுப்பத்திரம் புதுப்பிக்கப்படாமை, பெயர்மாற்றப்படாமை என இருந்த குறைபாடுகளால் இரண்டுபேர்களுக்கு உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
ஆறு வருடங்களாக தொடர்ந்த வழக்கு பல விசாரணைகளின் பின்னர் இறுதியாக கடந்த 21ம் திகதி அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றால் தீர்ப்பளிக்கப்பட்டது.
விசாரணைகளில் இக் காணிகளை வனப்பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட காணிகள் என்பதை நீதிமன்றில் உறுதிப்படுத்தாமையும், குற்றம் சாட்டப்பட்ட குடும்பஸ்தர்கள் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளரால் வழங்கப்பட்ட முறையான உத்தரவுப் பத்திரங்களுடன் தங்களுடைய காணிகளை பராமரித்தமையினை அடிப்படையாகக் கொண்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் குற்றத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
இது நீதித்துறையில் மக்கள் வைத்த நன்னம்பிக்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.
இந்த மக்களுடைய கரங்களை வலுப்படுத்த துணைநிற்கும் காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி, இணைந்து செயற்படும் சட்டத்தரணிகள், செயற்பாட்டாளர்கள் என அனைவருக்கும் நன்றிகள்.