மூன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சம் புகுந்தபோது இலங்கை அரசாங்கப் படைகளால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 150ற்கும் மேற்பட்டோருக்கு நாட்டில் எந்த நீதியையும் எதிர்பார்க்க முடியாது எனக் கூறும் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் மதத் தலைவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீதியை நிலைநாட்ட சர்வதேச தலையீட்டைக் கோருகின்றனர்.
“இது இலங்கை அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட கிழக்கு மாகாண இன அழிப்பே இது. வீதியில் நிற்கின்றோம். நீதி தேவதைக்கு கண் இல்லை, அதுபோலத்தான் இந்த விவகாரமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கடந்த 35 வருடங்களாக உள்ளக பொறிமுறை அல்லது இலங்கை அரசாங்கத்தின் ஊடாக கிடைக்கப்பெறாத நீதி இனியும் கிடைக்காது. ஆகவேதான் நாங்கள் சர்வதேச நீதிபொறிமுறை ஊடாக ஒரு தீர்வு கிடைக்க வேண்டுமெனக் கோருகின்றோம்.”
35 வருடங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் அரசாங்கப் பாதுகாப்புப் படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி செப்டெம்பர் 5, 2025ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் நினைவேந்தலில் பங்கேற்ற மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி அமலராஜ் அமலநாயகி இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
2000ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு மற்றும் தெற்கில் பதிவான 10,000 க்கும் மேற்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.