செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தமது கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், தமிழர்களின் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வலியுறுத்தலை தாம் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் எலும்புக்கூடுகள், சிறுவர்களின் உடைகள் மற்றும் குழந்தைகளின் பால் போத்தல் உள்ளிட்ட பொருட்களுடன் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியானது யுத்தகாலத்தில் இடம்பெற்ற அட்டூழியங்களை நினைவுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதி நிலைநாட்டப்படுவதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சுயாதீன விசாரணையையும், உண்மையான பொறுப்புக்கூறலையும் கோருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை இத்தகைய மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்துக்கு வட கரோலினா ஒரு வீடாக இருப்பதனையிட்டுப் பெருமிதமடைவதாகவும், இந்த மனிதப்புதைகுழி அகழ்வை அடுத்து அதுபற்றித் தன்னைத் தொடர்புகொண்டு பேசிய தனது தொகுதி மக்களை நினைத்துப்பார்ப்பதாகவும் காங்கிரஸ் உறுப்பினரான டெபோரா ரோஸ் அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி தமிழர்களின் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வலியுறுத்தலை தான் ஆதரிப்பதாகவும் அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார்.