உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுப்பதற்கு அரசாங்கமே தடையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். அரசாங்கம் எவ்வாறான தடையை ஏற்படுத்தினாலும் பிரதிப் பாதுகாப்பு அமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விடயத்தை கைவிடப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர அப்பதவியிலிருக்கும் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை நியாயமாக முன்னெடுக்க முடியுமா என்ற சந்தேகம் எமக்கு காணப்படுகிறது. இந்த விசாரணைகளின் போது அவர் சாட்சியமளித்திருக்கின்றார். அவருக்கு கீழ் பணியாற்றிய அதிகாரிகளும் சாட்சியளித்திருக்கின்றனர். அந்த வகையில் விசாரணைகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்கு இடமளிக்க வேண்டும் என அவர் எண்ணினால் நிச்சயம் பதவி விலகியிருப்பார்.
ஆனால் அவர் அதை செய்யாததன் காரணமாகவே எதிர்க்கட்சிகள் அவருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பித்தன. ஆனால் தற்போது நம்பிக்கையில்லா பிரேரணையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த பக்கச்சார்பற்ற விசாரணைகளுக்கு அரசாங்கத்தின் இந்த தீர்மானம் சவாலாக அமைந்துள்ளது. பாராளுமன்ற சம்பிரதாயங்கள் பல உள்ளன. அதற்கமைய பிரதி அமைச்சருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சமர்ப்பிக்க முடியாது எனக் கூறுகின்றனர். அவ்வாறெனில் அதற்காகவா இந்த அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றது?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுப்பதற்கு அரசாங்கமே தடையை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் நாம் இதனை கைவிடப் போவதில்லை. அரசாங்கத்தின் கூற்றிலுள்ள உண்மையை தன்மையும், அடிப்படையையும் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம். ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் பல்வேறு காரணிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
இதன் போது, அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கும், உள்ளுராட்சி சபைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கும், கட்சியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. தற்போது துறைமுகத்திலிருந்து கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் பரவலாகப் பேசப்படுகிறது. அது அரசியல் ஊடக பிரசாரமாக முன்னெடுக்கப்படுகிறது. பரிசோதனைகள் இன்றி கொள்கலன்களை விடுவிப்பதற்கு அரசாங்கமே தீர்மானித்தது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக விசேட அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்படுவதாகக் கூறப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இது தொடர்பில் பணிப்புரைகளை விடுத்திருந்தார். ஆனால் இதுவரையில் எந்தவொரு முறையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதன் காரணமாகவே போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருள் கொண்ட கொள்கலன்களும் விடுவிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் இதற்கான விசேட அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்படுவதாகக் கூறப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் இது தொடர்பில் பணிப்புரைகளை விடுத்திருந்தார். ஆனால் இதுவரையில் எந்தவொரு முறையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இதன் காரணமாகவே போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருள் கொண்ட கொள்கலன்களும் விடுவிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் இதற்கான முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றார்.-