நூருல் ஹுதா உமர்
காரைதீவு பிரதேச சபையின் 04 ஆவது சபையின் மூன்றாவது அமர்வு பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் சு.பாஸ்கரன் அவர்களின் தலைமையில் சகல உறுப்பினர்களினதும் பிரசன்னத்துடன் இன்று 17.09.2025 பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
தேசிய கீதத்துடன் ஆரம்பமான இந்த அமர்வில் மறைந்த முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகருமான எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களுக்கான மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கெளரவ தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர் கி. ஜெயசிறில் ஆகியோரால் இரங்கல் உரையும் நிகழ்த்தப்பட்டது. இதன்போது எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களுடன் உலங்கு வானூர்தியில் பயணித்தபோது காலஞ்சென்ற தமிழ் பிரமுகர்கள் பலருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் காலஞ்சென்ற எம்.எச்.எம். அஸ்ரப் தமிழ் மக்களுக்கும், நாட்டுக்கும், காரைதீவு பிரதேச சபைக்கும், காரைதீவு மக்களுக்கும் செய்த சேவைகள், சமூக நல்லிணக்க பணிகள் தொடர்பிலும் நினைவூட்டப்பட்டது.
இதன்போது காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரிக்குச் செல்லும் வீதியில் உள்ள பாலமானது வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் மீளநிர்மாணிக்கப்படவுள்ளதனால் பொதுமக்கள் மாற்று பாதையை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ள விடயம் மற்றும் காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக மாளிகைக்காடு அல் ஹுசைன் பாடசாலைக்கு அருகில் உள்ள காணியினை மீன் சந்தை அமைப்பதற்கு அல்லது பல்தேவைக் கட்டிடமென்றை அமைப்பதற்காக பிரதேச சபைக்கு வழங்க பிரதேச செயலாளரிடம் கோரிக்கை சமர்பிக்கப்பட்டுள்ள விடயம் சபைக்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும், சபைக்குச் சொந்தமான JCB இயந்திர விடயம் தொடர்பிலும், ஆடைத்தொழிற்சாலையில் மீள ஒப்படைப்பது தொடர்பிலும் பிரேரணை முன்வைக்கப்பட்டு ஆராயப்பட்டது. மேலும் பிரதேச சபையின் ஆளுகையின் கீழுள்ள வீதிகளை வீதி அபிவிருத்தித் திணைக்களம் பொறுப்பேற்று அவற்றை அபிவிருத்தி செய்து அவர்கள் பொறுப்பில் எடுப்பதற்கான கோரிக்கை உள்ளூராட்சி உதவி ஆணையாளரினால் கடிதத்தின் மூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய திணைக்களத்திற்கு வழங்குவதற்கு அனுமதி பெற சபைக்கு பிரேரணை முன்வைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது.
பிரபல சமூக செயற்பாட்டாளரும், றினோஸ் ரைஸ் மில் உரிமையாளருமான காலஞ்சென்ற றினோஸ் அவர்களின் பெயரினை மாளிகைக்காடு மத்தியில் அமைந்துள்ள தோனா வீதியின் இடது புறத்தில் காணப்படுகின்ற வாசிகசாலைக்கு முன்னால் செல்கின்ற வீதியின் பெயரை "மர்ஹூம் ஏ.ஆர்.எம்.றினோஸ் லேன்" என பெயர் சூட்டி வாத்தமானி வெளியிடுவதற்கு சபை அனுமதி கோரப்பட்ட 08 வாக்குகள் ஆதரவாகவும், 03 வாக்குகள் நடுநிலையாகவும் அளிக்கப்பட்டு பிரேரணை நிறைவேற்றப்பட்டது