ஒருவரை காணாமல் ஆக்கியமை குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஒரு வருடத்திற்கு முன்பு கோரிய ஆவணங்களை வழங்காத கடற்படைத் தளபதியை நீதிமன்றத்தில் முன்னிலையாகி விடயங்களை முன்வைக்க உத்தரவிடுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தை கோரியுள்ளது.
15 ஆண்டுகளுக்கு முன்னர் கேகாலையை சேர்ந்த சாந்த சமரவீர கடத்தப்பட்டு, திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள 'கன்சைட்' நிலக்கீழ் சித்திரவதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு, காணாமல் ஆக்கியமை தொடர்பான வழக்கு, நேற்றைய தினம் (செப்டெம்பர் 24) புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொல்கஹவெல நீதவான் டி.ஆர்.யு. உதும்பரா தசநாயக்கவிடம் இந்த கோரிக்கையை விடுத்தது.
இந்த விவகாரத்தில் பதினைந்து நாட்களுக்குள் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எடுக்கப்படும் என நீதவான் தெரிவித்தார்.
குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் செய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் முன்னாள் இலங்கை கடற்படை புலனாய்வுத் துறை பணிப்பாளர் சரத் மொஹோட்டி ஆகியோர் நேற்று (செப்டெம்பர் 24) பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்பதோடு, இணையவழி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் முதல் கோரப்படும் விசாரணைக்குத் தேவையான அறிக்கைகளை வழங்காமை குறித்து எதிர்வரும் நாட்களில் நீதிமன்றில் முன்னிலையாகி விளக்கமளிக்குமாறு கடற்படைத் தளபதிக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு, நீதிமன்றத்தில் விரிவான அறிக்கையை சமர்ப்பித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், நீதவானிடம் கோரிக்கை விடுத்தது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 124 இன் கீழ், ஒரு விசாரணையில் ஒரு நீதவான் முழு புலனாய்வு உதவியைப் பெற முடியும் எனவும், கடந்த ஆண்டு ஒக்டோபர் 2 ஆம் திகதி கோரப்பட்ட ஆவணங்களை கடற்படைத் தளபதி வழங்கத் தவறியமை நடந்து வரும் விசாரணையை பெரிதும் பாதித்துள்ளது எனவும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, நீதிமன்றத்தில் வலியுறுத்தினார்.
இது பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மாத்திரமல்ல பிரதிவாதிக்கும் பாதகத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் மேலும் கூறினார்.
சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன நீதிமன்றத்தில் முன்னிலையாவதை எதிர்த்த பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்ட தரப்பினருக்காக சட்டத்தரணி ஏன் முன்னிலையாகின்றார், யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பியது.
காணாமல் ஆக்கப்பட்ட சாந்த சமரவீரவின் சகோதரியின் ஆலோசனையின் பேரில் பாதிக்கப்பட்ட தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், இந்த விடயத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோரைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் சட்டத்தரணி அச்சலா அளித்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் சட்டத்தரணிகள் அளித்த சமர்ப்பிப்புகளைக் கருத்தில் கொண்ட பின்னர், கடற்படைத் தளபதி தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோரிய உத்தரவு தொடர்பாக பொருத்தமான உத்தரவைப் பிறப்பிக்க வழக்கை ஒக்டோபர் 8ஆம் திகதி மீண்டும் கூட்ட நீதிபதி உத்தரவிட்டார்.
பொல்கஹவெல நீதவான் உதும்பரா தசநாயக்க சந்தேகத்திற்குரிய இரண்டு முன்னாள் கடற்படை அதிகாரிகளையும் ஒக்டோபர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
2010 ஜூலை 22 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சில நாட்களின் பின்னர் காணாமலாக்கப்பட்ட கனேராலலாகே சாந்த சமரவீர தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக வெளிப்படுத்தப்பட்டுள்ள கன்சைட் கடற்படை வதை முகாம் அப்போது கடற்படை புலனாய்வுப் பிரிவின் தலைவராக இருந்த நிஷாந்த உலுகேதென்னவின் கீழ் செயற்பட்டு வந்ததன் காரணமாகவே இலங்கை கடற்படையின் 24 ஆவது கடற்படைத் தளபதியான அவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஜூலை 28 ஆம் திகதி கைது செய்தது.
திருகோணமலை நிலக்கீழ் கன்சைட் முகாம் தமது பொறுப்பில் இருந்தாலும் அங்கு விசேட புலனாய்வுப் பிரிவு என்ற பெயரில் அறியப்படும் ஓர் அலகு செயற்பட்டதாகவும் அது கடற்படை புலனாய்வுப் பிரிவால் செயற்படுத்தப்பட்ட அலகு அல்ல எனவும் நிஷாந்த உலுகேதென்ன தெரிவித்ததாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கடந்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்போது அங்கு 40 - 60 நபர்களை தடுத்து வைத்திருந்ததாக உலுகேதென்ன குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் தெரிவித்ததாக அத்திணைக்களம் கடந்த வழக்குத் தவணையின்போது நீதிமன்றத்துக்கு அறிவித்தது.
திருகோணமலையின் பிரபல ‘கன்சைட்’ நிலக்கீழ் வதைமுகாமை கண்காணித்ததன் பின்னர் அங்கு செயற்படும் விசேட புலனாய்வுப் பிரிவு எனும் குழுவை கலைக்குமாறு கோரி அன்றைய கடற்படை புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக பணியாற்றிய நிஷாந்த உலுகேதென்னவால் கடற்படைத் தளபதிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தின் பிரதியை கடற்படை தமக்கு வழங்கவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தது.
சாந்த சமரவீரவை கடத்தி காணாமல் ஆக்கிய குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் இலங்கை கடற்படை புலனாய்வுப் பணிப்பாளர் சரத் வணிக சிந்தாமாணி மொஹோட்டியை, செப்டெம்பர் 18, 2025 அன்று பொல்கஹவெல நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.