கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு மனிதப் புதைகுழியில் அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்காக பதினைந்து நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி மதிப்பீடு இன்னும் நீதி மற்றும் நிதி அமைச்சுகளுக்கு அனுப்பப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
35 வருடங்களுக்கு முன்னர் 150ற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மனி புதைகுழியில் அகழ்வாய்வை ஆரம்பிப்பதற்கான 2.8 மில்லியன் ரூபாய்க்கான பாதீட்டை கொழும்பு பிரதம சட்ட வைத்திய அதிகாரி செப்டெம்பர் 23, 2025 அன்று களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
குருக்கள்மடத்தில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பாதீட்டை ஏற்றுக்கொண்ட நீதவான் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், அதை மேல் நீதிமன்றம் மூலம் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று (ஒக்டோபர் 9) களுவாஞ்சிக்குடி நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முஸாம் முபாரக், பாதீட்டைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், அதனை நீதி மற்றும் நிதி அமைச்சுகளுக்கு அனுப்பப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் மேல் நீதிமன்றம் இன்று நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
"பாதீட்டு அறிக்கை மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, மேல் நீதிமன்றம் மூலம் நீதி மற்றும் நிதி அமைச்சுகளுக்கு அது அனுப்பப்படும் என இன்று நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டது."
இதற்கமைய வழக்கு ஒக்டோபர் 27, 2025 அன்று மீண்டும் விசாரிக்க நீதவான் உத்தரவிட்டதாக சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் அகழ்வாய்வுப் பணிகளை ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு களுவாஞ்சிகுடி நீதவான் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் ஓகஸ்ட் 25, 2025 அன்று அரச அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மூன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் நடந்த படுகொலைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எலும்புக்கூடுகள் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்படாமல், அகழ்வாய்வினை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள, இலங்கையில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் முதலாவது மனித புதைகுழி இதுவாகும்.
2014 சுற்றுலா நீதிமன்றம்
1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்து காத்தான்குடிக்குத் திரும்பிய முஸ்லிம்கள் குழு ஒன்று படுகொலை செய்து புதைத்ததாக உள்ளூர்வாசி அப்துல் மஜீத் அப்துல் ரவூப் களுவாஞ்சிக்குடி பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் 2014ஆம் ஆண்டு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக உள்ளூர் ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த வழக்கு ஜூலை 1, 2014 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, படுகொலை செய்து புதைக்கப்பட்டமைக்கான நியாயமான சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பிரதேசத்தில் அகழ்வினை மேற்கொள்வதற்குத் தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நீதிபதி ஏ.எம். ரியால் உத்தரவிட்டார், எனினும் அந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
11 வருடங்களின் பின்னர் களுவாஞ்சிக்குடி, நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாட்டாளரான அப்துல் மஜீத் அப்துல் ரவூஃப் தனது சட்டத்தரணிகள் மூலம் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், ஜூலை 11, 2025 அன்று இந்த வழக்கு திறந்த நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.