இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக வன்னி வாழும் தமிழ் சைவ மக்கள் வழிபட்டு வரும் மலைக்கோயில் ஒன்றின் நிர்வாக சபையின் பிரதிநிதிகள் இருவரை பயங்கரவாதத் தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவுக்கு சமுகமளிக்குமாறு அழைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் அவர்களுக்கு தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேசத்தில் வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாக சபையின் தலைவர் செல்வதுரை சசிகுமார் மற்றும் முன்னாள் செயலாளர் துரைராசா தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஒக்டோபர் 09 ஆம் திகதி வியாழக்கிழமை காலை ‘தொல்பொருள் இடம் தொடர்பான விசாரணை ஒன்றுக்காக’ என அறிவிக்கப்பட்டு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் (CTID) வவுனியா பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாக சபையின் தலைவர் செல்வதுரை சசிகுமாரிடம் சுமார் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் தம்மிடம் வாக்குமூலம் பதிவு செய்த பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தமக்கு தொடர்பு உள்ளதா என விசாரித்ததாக பிரதேச சபை உறுப்பினராகவும் உள்ள துரைராசா தமிழ்ச்செல்வன் பிராந்திய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
"விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகள் இருக்கா? விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் எத்தனைப் பேர் இருக்கின்றார்கள். போன்ற விடயங்களை கேட்டார்கள். எனக்குத் தொடர்பில்லை எனத் தெரிவித்திருந்தேன்."
ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாக சபையின் நிர்வாகத்திலிருந்து விலகியமை தொடர்பிலும் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் (CTID) வவுனியா பிரிவு அதிகாரிகள் விசாரித்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
"ஆலய நிர்வாகத்தில் இருந்து ஏன் வெளியேறினீர்கள் எனக் கேட்டார்கள். நிர்வாக சபை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றப்படும் நான் சொன்னேன்."
வவுனியாவின் வெடுக்குநாரி மலையில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான காரணம் யாதெனக் கேட்ட துரைராசா தமிழ்ச்செல்வனிடம் மேலிடத்திலிருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவிற்கு அமைய அந்த விசாரணை நடைபெறுவதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"கோயில் குறித்த விடயங்களை பயங்கரவாத பொலிஸார் ஏன் விசாரிக்கின்றீர்கள் எனக் கேட்டேன். இது மேல் இடத்தில் இருந்து வந்த உத்தரவின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டார்கள்."
இந்த விசாரணை ஏற்றுக்கொள்ள முடியாதது எனக்கூறும் பிரதேச சபை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்வதன் மூலம் செயற்பாட்டாளர்களை மௌனமாக்கி விட முடியும் என பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் எண்ணுவதாக பிராந்திய ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்தார்.
“இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எல்லைக் கிராமங்களில் இருந்து மக்களுக்காக குரல் கொடுக்கும் எங்களை நசுக்கும் ஒரு செயற்பாடே இது. மதத்தை வைத்து எங்களை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றார்கள். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த மதம் சார்ந்து முன்நிற்பவர்களை கொண்டுவந்தால் நாங்கள் அச்சமடைந்து இதிலிருந்து விலகிவிடுவோம் என நினைக்கின்றார்கள்.”
சிலை புதருக்குள் வீசி எரியப்பட்டது
வெடுக்குநாரி மலையின் உச்சியில் உள்ள சிவன் கோவிலுக்கு 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் சேதம் விளைவித்த மர்ம நபர்கள் மலை உச்சியில் வைக்கப்பட்டிருந்த ஆதி லிங்கேஸ்வரர் சிலையைக் கழற்றி ஒரு புதர்க் காட்டில் எறிந்திருந்தனர்.
சிவன் சிலைக்கு மேலதிகமாக அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர், அம்மன் மற்றும் வைரவர் ஆகிய மூன்று சிலைகளையும் அந்த இடத்திலிருந்து காணாமலாக்கப்பட்டிருந்தன.
2024 மார்ச் 8ஆம் திகதி இரவில் நீதிமன்ற உத்தரவைப் பொருட்படுத்தாது இரவு நேர விசேட பூஜையை நடத்தியதாக குற்றம் சாட்டி ஆதி லிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி பூஜை செயற்பாடுகளை மேற்கொண்டிருந்த தமிழ் சைவர்கள் 8 பேரை கைது செய்த பொலிசார் பூஜை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களையும் கையகப்படுத்தியிருந்தனர்.
அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கு பொலிசார் தரப்பிலிருந்து போதிய ஆதாரங்கள் முன்வைக்கப்படாததால் அவ்வழக்கினை தள்ளுபடி செய்து அனைவரையும் விடுதலை செய்யுமாறு 2024 மார்ச் 19ஆம் திகதி வவுனியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ் மக்கள் வெடுக்குநாரி ஆதிலிங்கேஸ்வர ஆலயம் என அழைக்கின்றனர், ஆனால் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் இவ்விடம் கடந்த காலத்தில் வட்டமான பர்வத விகாரை என அழைக்கப்பட்டதாக ஒரு கருத்தும் நிலவுகிறது.