பொத்துவில் அறுகம்பே பகுதியில் இயங்கி வந்த இஸ்ரேலியர்களின் சபாத் இல்லம் பூட்டப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் வாஸித் தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அமைவாகவே சவாளை பிரதேசத்தில் P/05 கிராம பிரிவில் இயங்கிக் கொண்டு வந்த இஸ்ரவேலர்களின் வணக்கஸ்தலமான சபாத் இல்லம் கடந்த 10 ஆம் திகதியன்று பூட்டப்பட்டுள்ளது.
கோமாரி பிரதேசத்தில் இடம்பெற்ற நீர்வழங்கல் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வொன்றின்போது, அம்பாறை மாவட்ட பொலிஸ்மா அதிபர் இதனை உறுதிப்படுத்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக குறித்த சபாத் இல்லம் மூடப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் பொத்துவில் பிரதேச சபையிலும் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்டோரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு, குறித்த சபாத் இல்லத்தை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது. அந்த அடிப்படையில் சட்டவிரோதமான முறையில் அறுகம்பேயில் இயங்கிவந்த இஸ்ரவேலர்களில் வணக்கஸ்தலம் இப்போது பூட்டப்பட்டுள்ளது.
மேலும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, அமைச்சினுடைய செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் இந்த விடயத்தோடு சம்மந்தப்பட்ட அனைவருக்கும் இதுவிடயத்தில் தான் நன்றி தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் வாஸித் மேலும் தெரிவித்தார்