வில்பத்து வனாந்திரத்திற்குள் காணப்படுகின்றன விலாச்சிக் குளம் ஒதுக்கப்பட்ட காட்டுப் பகுதியினை அழித்தார் எனக் குற்றஞ்சாட்டி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று புதன்கிழமை மேன் முறையீட்டு நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்ன மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி நாகலந்த கொடிதுவக்கு ஆகியோரினால் 2018ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்த ரிட் மனு மீதான விசாரணை நீதியரசர்களான தம்மிக கணேபொல மற்றும் ஆதித்ய படபெந்திகே ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போதே குறித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ மற்றும் றிசாத் பதியுதீன், வனப் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபை, காணி ஆணையாளர் நாயகம், முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் சகோதரரான றியாஜ் பதியுதீன் மற்றும் கணக்காய்வாளர் நாயகம் ஆகியோர் பிரதிவாதிகளாக இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றுவதற்காக விலாச்சிக் குளம் ஒதுக்கப்பட்ட காட்டுப் பகுதியின் 650 ஏக்கர் சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்டதாகவும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில் முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியுதீன் மற்றும் அவருடைய சகோதரரான றியாஜ் பதியுதீன் ஆகியோர் மனிதக் குடியிருப்புக்களை நிறுவுவதற்கு தடை விதிக்குமாறும் இந்த மனுவின் கோரப்பட்டிருந்தது.
கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவினை மனுதாரர்கள் தொடர்ந்து முன்னெடுக்கத் தவறியதால் இந்த ரிட் மனுவினை தள்ளுபடி செய்யத் தீர்மானிக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் சார்பாக மன்றில் சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் சட்டத்தரணி ஷிபான் மஹ்ரூப் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
இந்த விவகாரத்தை முன்னிறுத்தி கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்ட இனவாத பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.