15 வருடங்களாக ‘ஊடக அமைச்சருக்குத் தெரியாத’ ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் இதோ!

கடந்த ஒன்றரை தசாப்தங்களாக இலங்கையில் கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை குறித்து ஊடகத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த உத்தியோகபூர்வ தகவல்களின் நம்பகத்தன்மை கடுமையாக கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

2010 முதல் கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட மற்றும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் 2025 மார்ச் 7 அன்று ஊடகத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

பிரகீத் எக்நெலிகொடவின் கடத்தலைத் தவிர்த்து, அந்தக் காலகட்டத்தில் எட்டு ஊடகவியலாளர்கள் மாத்திரமே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, நேற்றைய தினம் (ஒக்டோபர் 22) நாடாளுமன்றத்தில் அளித்த பதிலில் குறிப்பிட்டிருந்தார்.

“2010 முதல் இன்று வரை, இந்த பதிலுக்கு அமைய 01 கடத்தல் மற்றும் 08 தாக்குதல்கள் மாத்திரமே பதிவாகியுள்ளன,” என வைத்தியர் ஜயதிஸ்ஸ கூறினார்.

“பிரகீத் பண்டார எக்நெலிகொட கடத்தல். மஹிந்த ஆரியவன்ச, தனுஷ்க சம்பத் செனவிரத்ன, ரயிப்தீன் பாரூக் மொஹமட் சுஹைல், சுப்பிரமணியம் பாஸ்கரன், சமில ஜனித் குமார ஏகநாயக்க, அசங்க கிரிஷாந்த பாலசூரிய, சினேஷ் உபேந்திரா, இந்துனில் சிசிர விஜேநாயக்க ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்”

எனினும், ஊடகங்கள் மற்றும் உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடக அமைப்புகள் நாடு முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மீதான சித்திரவதை மற்றும் தாக்குதல் வழக்குகளை அம்பலப்படுத்தியுள்ளதால், அமைச்சரின் தரவு கடுமையான சவாலுக்கு உள்ளாகியுள்ளது. இதில் குறைந்தது இரண்டு கடத்தல்கள் அடங்கும்.

அவர்களில் பெரும்பாலோர் தாங்கள் செய்த குற்றங்கள் குறித்து பொலிஸார் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இவற்றில், வன்னியில் ஒரு தமிழ் ஊடகவியலாளர் மூன்று முறைக்கு மேல் தாக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர் தன்னிடம் காணப்படும் பெயர்களையும், இது தொடர்பாக மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படும் விசாரணைகளின் தற்போதைய நிலையையும் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியிருந்தார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரிக்கிறதா இல்லையா, அப்படியானால், பரிந்துரைகள் என்ன என்பது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

கடந்த மாதம் தாக்கப்பட்ட தெற்கைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் குறித்து குறைந்தபட்சம் எந்த தகவலும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

ரிதீமாலியத்த, மஹியங்கனையைச் சேர்ந்த உள்ளூர் ஊடகவியலாளரான விமுக்தி சஞ்சய பெரேரா, 2025 செப்டெம்பர் 19 அன்று மரக்கடத்தல்காரர் என நம்பப்படும் ஒருவரால் எவ்வாறு கடுமையாகத் தாக்கப்பட்டார் என்பதையும், மொரகொல்லாகம பிரதேசத்தின் உள்ளூர் ஊடகவியலாளர் சிசிர நந்தன கெலேகம, செப்டெம்பர் மாதம் பொல்பிதிகம பகுதியில் பாதுகாப்பற்ற விவசாய கிணற்றில் விழுந்து ஒரு குழந்தை இறந்ததை லங்காதீப பத்திரிகையில் செய்தி வெளியிட்டதற்காகவும், பின்னர் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் செய்தி வெளியிடப்பட்டமைக்காகவும் ஒரு குண்டர் குழுவால் தாக்குதலுக்கு உள்ளானதையும் சுதந்திர ஊடக இயக்கம் இரண்டு அறிக்கைகளில் வெளிப்படுத்தியிருந்தது.

2010 முதல் கடந்த பதினைந்து வருடங்களில் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பல தமிழ் ஊடகவியலாளர்கள் அரசாங்க பாதுகாப்புப் படையினர், அரசியல்வாதிகள் மற்றும் கடத்தல்காரர்களால் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகியிருந்தாலும், இந்தத் தாக்குதல்கள் ஒக்டோபர் 22, 2025 அன்று வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களில் சேர்க்கப்படவில்லை.

அமைச்சருக்கு அறிவிக்கப்படாத ஆனால் ஊடகங்களால் அறிவிக்கப்பட்ட சில தாக்குதல்கள் குறித்த விபரங்கள் கீழே

சுயாதீன ஊடகவியலாளர் பிரசாத் பூர்ணிமல் ஜயமான்ன, செப்டெம்பர் 2012 இல் சிலாபம் வைத்தியசாலையில் ஒரு பாதுகாப்பு அதிகாரியால் தாக்கப்பட்டார். சிலாபம் நகர மேயர் ஹிலாரி பிரசன்ன பெர்னாண்டோ முன்னிலையில், தனது தொழில்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது தான் தாக்கப்பட்டதாக ஊடகவியலாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

2016 ஆம் ஆண்டு மனித உரிமைகள் தினத்தன்று, போராட்டக் குழுவினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு கப்பல்களை மீட்பதற்காக இலங்கை கடற்படை ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைந்தபோது, ​​அப்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, ஹம்பாந்தோட்டை ஊடகவியலாளர் திலிப் ரோஷன் குணசேகரவை கடுமையான வார்த்தைகளால் திட்டிய காணொளி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத தேக்கு மர வர்த்தகம் குறித்து ஆராய்ந்த இரண்டு தமிழ் ஊடகவியலாளர்களான, கனபதிப்பிள்ளை குமணன் மற்றும் சண்முகம் தவசீலன் ஆகியோர், ஒக்டோபர் 12, 2020 அன்று மரக் கடத்தல்காரர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஊழலை அம்பலப்படுத்தப் பணியாற்றிய ஊடகவியலாளர்கள் எவ்வாறு குற்றவாளிகளின் இலக்காக மாறினர் என்பதை பெப்ரவரி 2025 இல் நாடாளுமன்றத்தில் நினைவு கூர்ந்தார்.

“முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோதமாக மரம் வெட்டுவது அம்பலப்படுத்தப்பட்டபோது, ​​அது குறித்த செய்திகளைச் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களான கனபதிப்பிள்ளை குமணன் மற்றும் சண்முகம் தவசீலன் ஆகியோர் சட்டவிரோத மரக் கடத்தல்காரர்களால் தாக்கப்பட்டனர்.”

சுயாதீன ஊடகவியலாளர் சுஜீவ கமகே மார்ச் 10, 2021 அன்று கடத்தப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பின்னர் வீதியில் கைவிடப்பட்டார். ஜனாதிபதி செயலகத்தின் உத்தரவின் பேரில் தான் அவ்வாறு செயல்பட்டதாக, கொழும்பு குற்றப்பிரிவு (CCD) உதவி பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வா ஊடகவியலாளரின் மனைவியிடம் பின்னர் கூறியிருந்தார்.

வாக்குமூலம் அளிக்க சுஜீவ கமகேவுடன் சென்ற சட்டத்தரணி நாமல் ராஜபக்சவை, கொழும்பு குற்றப்பிரிவு அனுரங்க என்ற பொலிஸ் பரிசோதகர் திட்டியதாக சட்டத்தரணி கூறியிருந்தார்.

கொவிட் காலத்தில் அம்பாறையைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ஷாஹீர் கான் பாறுக்கை அக்கரைப்பற்று பொலிஸ் அதிகாரிகள் தாக்கி, அவரது பணி உபகரணங்களையும் சேதப்படுத்தியிருந்தனர்.

அம்பாறை, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த ஷாஹீர் கான் பாறுக், செப்டெம்பர் 2, 2021 அன்று வியாழக்கிழமை வீட்டை விட்டு வெளியேறும்போது முகக்கவசம் அணியவில்லை என குற்றம் சாட்டி, பொலிஸார் அவரைத் தாக்கியதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவித்திருந்தனர்.

ஊடகவியலாளரைத் தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் அவரை பொலிஸ் வாகனத்தில் கொடூரமாக இழுத்துச் செல்லும் காணொளியும் சமூக ஊடகங்களில் வெளியாகிருந்தது.

சுயாதீன ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன், நவம்பர் 27, 2021 சனிக்கிழமை, முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகையை காணொளி பதிவு செய்துகொண்டிருந்தபோது, ​​இராணுவத்தினரால் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.

ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரனை முற்கம்பியால் சுற்றப்பட்ட பனை ஓலையால் இராணுவம் தாக்கியதை, முல்லைத்தீவு ஊடக அமையமும் புகைப்படங்களை மேற்கோள் காட்டி உறுதிப்படுத்தியது.

தாக்குதல் மற்றும் சித்திரவதை குற்றச்சாட்டில் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 59வது படைணியைச் சேர்ந்த மூவர் சில மணி நேரங்களுக்குள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பெப்ரவரி 26, 2022 அன்று காலை, மட்டக்களப்பில் நடந்த ஒரு போராட்டத்தைப் பற்றி செய்தி வெளியிடும் போது ஐபிசி ஊடக நிறுவனத்தின் மட்டக்களப்பு பிராந்திய ஊடகவியலாளர் லட்சுமணன் தேவபிரதீபன் தாக்கப்பட்டார்.

லட்சுமணன் தேவபிரதீபனைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில், அப்போதைய இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் ஆதரவாளரான வேலுப்பிள்ளை நந்தன் என்ற சந்தேகநபர், பெப்ரவரி 28, 2022 திங்கட்கிழமை காலை ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஜூன் 17, 2022 அன்று, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மல்லாவி நகரில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் பற்றிய செய்தி சேகரித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன், இராணுவமும் பொலிஸாரும் பார்த்துக்கொண்டிருந்தபோது, ​​மல்லாவி அனிஞ்சியன்குளத்தைச் சேர்ந்த அம்புநாதன் தினேஷ்குமாரால் தாக்கப்பட்டார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகித்த, அரகலய போராட்ட காலத்தில், ​​கொள்ளுப்பிட்டியில் உள்ள ஐந்தாவது ஒழுங்கையில் அவரது தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் ஜூலை 9, 2022 அன்று மூத்த பொலிஸ் பரிசோதகர் ரொமேஷ் லியனகேவின் உத்தரவில், ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலில் நியூஸ்பெஸ்ட் ஊடகவியலாளர்கள் பலர் காயமடைந்தனர்.

சரசி பீரிஸ், காளிமுத்து சந்திரன், இமேஷ் சதர்லேண்ட், சானுக வீரகோன், பனிந்து லோகுருகே, வருண சம்பத், ஜூடின் சிந்துஜன் மற்றும் ஜனிதா மெண்டிஸ் ஆகியோரை சிரச ஊடக வலையமைப்பு தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்களாக பெயரிட்டிருந்தது.

இந்த விவகாரம் குறித்து, விசேட அதிரடிப்படை கட்டளை அதிகாரி வருண ஜெயசுந்தர, விசேட அதிரடிப்படை பணிப்பாளர் ரொமேஷ் லியனகே மற்றும் விசேட புலனாய்வுப் பிரிவின் மூத்த பொலிஸ் பரிசோதகர் டி.எஸ். விக்ரமசிங்க ஆகியோரை அழைத்து விசாரணை நடத்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ரொமேஷ் லியனகேவை உடனடியாக கொழும்பிலிருந்து இடமாற்றவும், பாரபட்சமற்ற விசாரணை நடத்தவும் பொலிஸ் மாஅதிபருக்கு பரிந்துரைத்திருந்தது.

வெகுஜன ஊடக அமைச்சர் நாடாளுமன்றத்தில் வழங்கிய பதிலில் இது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான இல்லத்தை முற்றுகையிட்டதன் ஒரு வருட நிறைவைக் குறிக்கும் வகையில் மே 31, 2023 அன்று நடத்தப்பட்ட போராட்டத்தைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் சாந்த விஜேசூரிய, நுகேகொட சந்தியில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்கு முன்னால் பொலிஸாரால் தாக்கப்பட்டார்.

2023 ஜூலை 28 ஆம் திகதி பொரளையில் நடந்த போராட்டத்தைப் பற்றி செய்தி அறிக்கையிட்ட பின்னர், வீடு திரும்பிய தன்னை, வலுக்கட்டாயமாகக் கைது செய்து, தாக்கி, வைத்திய சிகிச்சை இன்றி பொலிஸில் தடுத்து வைத்தமை குறித்து இலங்கை பொலிஸாருக்கு எதிராக ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்திருந்தார்.

2024 டிசம்பர் 26 ஆம் திகதி, வியாழக்கிழமை, கிளிநொச்சியில் உள்ள ஏ-9 வீதியில், சுயாதீன ஊடகவியலாளரும் கிளிநொச்சி ஊடக அமையத்தின் செயலாளருமான முருகையா தமிழ்செல்வனை கடத்த வாகனத்தில் வந்த ஒரு குழு, தங்கள் முயற்சி தோல்வியடைந்த நிலையில், அவரை கடுமையாக அச்சுறுத்திவிட்டு அங்கிருந்துச் சென்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நடந்த மணல் மோசடி குறித்து செய்தி வெளியிட்டு வந்த முல்லைத்தீவு ஊடக அமையத்தின் முன்னாள் தலைவர் சண்முகம் தவசீலன், பெப்ரவரி 15, 2025 அன்று மாங்குளம் பொலிஸில் தனக்கு வந்த கொலை அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல் குறித்து முறைப்பாடு அளித்தார். தன்னை அச்சுறுத்திய இருவரின் புகைப்படங்களையும், அவர்கள் வந்த NP BFR 8429 என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட மோட்டார் சைக்கிளின் விபரங்களையும் பொலிஸாரிடம் வழங்கினார்.

ஜூலை 2, 2025 அன்று இரவு, அட்டாளைச்சேனை பொது விளையாட்டு அரங்கிங்கு அருகில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான ரியா மசூர் உட்பட மூன்று நபர்களால் தாக்கப்பட்டு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட பிபிசி தமிழ் சுயாதீன ஊடகவியலாளர் யு.எல். மப்றுக், அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

பரிஸை தளமாகக் கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு (RSF) வெளியிட்ட 2025 ஆம் ஆண்டிற்கான உலக ஊடக சுதந்திர குறியீட்டிற்கு அமைய, உலகின் 180 நாடுகளில் இலங்கை 139 வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டிருந்தது.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc