யாழ் இந்துக் கல்லூரியின் பெருமைமிகு பழைய மாணவர்
கனடாவின் உயரிய இராணுவ மரியாதைகளில் ஒன்றான Order of Military Merit (M.M.M.) விருதை தலைநகரன்மான ஒட்டாவாவில் வசிக்கும் ஈழத்தமிழரான வாகீசன் மதியாபரணம் அவர்கள் பெற்றுள்ளார். இதன்மூலம், இவ்விருதை பெற்ற முதல் ஈழத்தமிழராக வரலாற்றில் பெயர் பதித்துள்ளார். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்விருது வழங்கும் விழா, கனடாவின் ஆளுநர் ஜெனரல் வசிக்கும் Rideau Hall மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது.
அகதியாக கனடாவிற்கு வந்த வாகீசன் அவர்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கனடா இராணுவத்தில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். அர்ப்பணிப்பு, ஒழுக்கம், மற்றும் கடமை உணர்வுடன் பணியாற்றிய அவருக்கு, இந்த விருது கனடா அரசால் வழங்கப்படும் மிக உயரிய கௌரவங்களில் ஒன்றாகும்.
விருதைப் பெற்றபின் அவர் கருத்து தெரிவித்த போது ,
“இந்த விருது ஒரு பதக்கம் மட்டுமல்ல — என் கனவின் நிறைவேற்றம்.
அகதியாக வந்த ஒரு தமிழ் இளைஞன், கனடா என்ற தேசத்துக்கு பணியாற்றி, அதன் உயரிய மரியாதையைப் பெறுவது மிகுந்த பெருமை அளிக்கிறது,”
என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
வாகீசன் மதியாபரணம் அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் 1983 முதல் 1988 வரை கல்வி கற்றவர். அவர் கல்லூரியின் மாணவத் தலைவர் (1986–1988) ஆகவும், உதைபந்தாட்டம் மற்றும் கிரிக்கெட் அணிகளில் வீரராகவும், வர்த்தக மன்றத் தலைவர் (1987) ஆகவும், மேலும் சாரணர் அணியின் செயற்பாட்டாளராகவும் சிறந்தார்.
1988 ஆம் ஆண்டு கனடாவிற்கு குடிபெயர்ந்த அவர், Canadian Military College-இல் பட்டம் பெற்று 1995 இல் கனடிய இராணுவத்தில் இணைந்தார். பின்னர், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நேட்டோ சமாதானப் படைகளில் கனடா சார்பாக பணியாற்றும் பெருமை பெற்றார்.
தமிழ் மாணவர்களுக்கு உதவும் நற்பணி
தாயகத்தில் கல்வி சவால்களை எதிர்கொள்கிற தமிழ் மாணவர்களின் நலனை கருதி, அவர் சில நண்பர்களுடன் இணைந்து ‘தமிழ் மாணவர்கள் உதவித் திட்டம்’ (Tamil Students Assistance) என்ற அமைப்பைத் தொடங்கி தொடர்ந்து நற்பணி செய்து வருகிறார்.
சமூகத்தின் பெருமை
அவரது சாதனை, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், புதிய வாழ்க்கையைத் தொடங்கிய அகதிகளுக்கும் முன்னுதாரணமாகவும் ஊக்கமூட்டலாகவும் திகழ்கிறது. சமூக ஊடகங்கள் வழியாக பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.