எதிர்வரும் நவம்பர் மாதம் 22ம் 23ம் திகதிகளில் கம்போடியா தேசத்தில் அங்குள்ள சவுத் ஈஸ்ட் ஏசியா பல்கலைக்கழகமும் அங்கோர் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் ‘கடாரம் கொண்டான்’ ராஜேந்திர சோழன் மன்னரின் 1000வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் மற்றும் சிறப்பு மாநாடு ஆகிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழர் விழாக்களுக்கு கனடாவின் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினரும் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மேற்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொண்டாட்டத்திற்கு வழங்கியுள்ள வாழ்த்துப் பத்திரத்தில் ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் அங்கோர் தமிழ்ச் சங்கத்தின் பெருமைக்குரிய தலைவர் தங்கவேலு ஶ்ரீனிவாச ராவ் அவர்களைப் பாராட்டி தனது பாராட்டுக்களை பின்வருமாறு தெரிவிதுள்ளார்.
“உங்கள் அயராத முயற்சிகளால், எமது மாண்பிற்குரிய பேரரசர் ராஜேந்திர சோழனின் சாதனைகளின் மரபும், தமிழ் நாகரிகத்திற்கும் தென்கிழக்கு ஆசியாவிற்கும் இடையிலான பகிரப்பட்டுவரும் கலாச்சார பாரம்பரியமும் தொடர்ந்து போற்றப்பட்டு நினைவுகூரப்படுகின்றன. அதற்கு உங்க்ளைப் போன்றவர்கள் காரணகர்தாக்களாக விளங்குகின்றார்கள் என்பதை நாம் உணர்கின்றோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 22ம் 23ம் திகதிகளில் கம்போடியா தேசத்தில் நடைபெறவுள்ள ‘கடாரம் கொண்டான்’ ராஜேந்திர சோழன் மன்னரின் 1000வது ஆண்டு விழாக் கொண்டாட்டம் மற்றும் சிறப்பு மாநாடு ஆகிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழர் விழாக்களில் கலந்து கொள்ளும் முகமாக உலகின் பல நாடுகளிலிருந்தும் கல்வியாளர்கள், கலை இலக்கியவாதிகள் மற்றும் சுற்றுலாப் பயணங்களில் ஆர்வமுள்ளவர்கள் என பலர் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்கின்றார்கள் என அறியப்பெறுகின்றது.
மேலும். அங்கு செல்லும் அனைத்து வெளிநாட்டவர்களையும் அங்கோர் தமிழ்ச் சங்கத்தினர் சுற்றுலா ஏற்பாட்டில் பல இடங்களுக்கும் அழைத்துச் செல்லவுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்படி மாநாட்டிலும் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளும் விசேட அழைப்பைப் பெற்றவர்களாக கனடாவிருந்தும் சில அன்பர்கள் கம்போடியாவிற்கு பயணமாகின்றார்கள்.
அவர்களில் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளையின் தலைவரும் அதன் அகிலத் தலைமையகத்தின் அனைத்துலக ஊடகப் பொறுப்பாளருமான லோகன் லோகேந்திரலிங்கம். உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகிலத் தலைமையக செயற்குழுவின் பொருளாளர் மோகன் பாலசுப்பிரமணியம் அவர்கள், மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாக் கிளையின் பொருளாளர் ராம்சங்கர் சிவநாதன் அவர்களும் ஒன்றாக பயணிக்கவுள்ளார்கள். அத்துடன் அவர்கள் கனடாவில் தலைமையகத்தைக் கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சார்பாக வாழ்த்துக் கேடயம் ஒன்றையும் அங்கோர் தமிழ்ச் சங்கத்தினருக்கு வழங்கவுள்ளார்கள்.
கனடாவிலிருந்து மேற்படி சிறப்பு விழாக்களில் கலந்து கம்போடியாவின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களையும் கண்டு மகிழ 416 732 1608 என்னும் இலக்கத்தை அழைக்கலாம்.