2030இல் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள்... 21.6 பில்லியன் டொலர் வருமானம்... : இலங்கையின் நீண்ட கால இலக்கு

இன்றைய உலகில் சுற்றுலா ஒரு பயன்மிகு துறையாக விளங்குகின்றது. ஒரு நாட்டின் கண்ணுக்குத் தெரியாத ஏற்றுமதிப் பொருளாக சுற்றுலா மிளிர்கிறது. சுற்றுலா மூலம் ஒரு நாடு பல்வேறு வழிகளில் பயன்பெறுகின்றது.

சுற்றுலா என்னும் சொல்லினைக் குறிக்கும் ‘Tour’ என்னும் ஆங்கிலச் சொல்லானது ‘TORNUS’ என்னும் இலத்தின் மொழிச் சொல்லிலிருந்து பிறந்தது. Tornus  என்றால் சக்கரம் எனவே இச்சொல் சுற்றிவருவதைக் குறிக்கிறது. “இன்பப் பொழுதுபோக்குக்காக பயணம் மேற்கொள்ளுதல் அல்லது பயணிகளுக்கு வழிகாட்டுதல், சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுத்தல் முதலிய பணிகளைச் செய்யும் தொழிலகம் சுற்றுலா எனப்படும் என பிரிட்டானியா கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது.

‘எவரொருவர் எவ்வித குறிக்கோளுமின்றி தனது நாட்டின் எல்லையைக் கடந்து பிற நாட்டில் தற்காலிகமாகத் தங்கி, தான் வேறு எங்கோ ஓரிடத்தில் ஈட்டிய பணத்தை அங்கு செலவிடுகிறாரோ அவரே சுற்றுலாப் பயணி ஆவார்.

சுற்றுலாக் கழகம் ‘ஒரு நாட்டில் குறைந்தளவு 24 மணி நேரமாவது பயணம் செய்பவர் சுற்றுலாப்பயணி’ என வரையறை செய்துள்ளது. சுற்றுலா மூலம் நாடுகளில் தேசிய வருவாய் அதிகரிக்கிறது. இதனால் நாடுகளின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து பல துறைகளில் முன்னேறுகின்றது. நாடு மட்டுமல்லாது தனிநபரும் பயனடைகின்றனர். சுற்றுலா பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த துறையாக இருப்பதுடன் சமுதாய முக்கியத்துவமும் பெற்றுள்ளது.

சமுதாயத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சமுதாய வளர்ச்சிக்கு பெரும் பங்கேற்கின்றது. சமுதாய அமைப்பு முறையிலும், மக்கள் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

உலக சுற்றுலா தினம்

சுற்றுலாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் நோக்கிலும் சுற்றுலாவில் நாட்டின் பொருளாதாரமும் உண்டு என்பதை விபரிக்கும் நோக்கிலும் உலக சுற்றுலா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தொனிப்பொருளை (Theme)  மையமாகக் கொண்டு கொண்டாடப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் உலக சுற்றுலா அமைப்பு  (UNWTO) 2024ஆம் ஆண்டுக்கான உலக  சுற்றுலா தினத் தொனிப்பொருளாக “சுற்றுலாவும் அமைதியும்”  (Tourism and Peace) என்பதைக்  குறிப்பிட்டுள்ளது.

சுற்றுலா மூலம் மனித குலத்தை மேம்படுத்தும் வகையில் செப்டெம்பர் 27ஆம் திகதியை உலக சுற்றுலா தினமாக 1970ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்து அறிவித்தது. சுற்றுலாவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அதன் வளர்ச்சியை ஊக்குவிப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும்.

இந்த ஆண்டு அதிகாரபூர்வ உலக சுற்றுலா தினம் 2024ஆம் ஆண்டுக்குரிய மாநாடு மற்றும் நிகழ்வுகள் ஜோர்ஜியாவின் திபிலிசியில் (Georgia-Tbilisi) நடைபெறுகிறது.

உலக சுற்றுலா தினம் என்பது சுற்றுலாவின் சமூக, கலாசார, பொருளாதார  மற்றும் அரசியல் மதிப்பு குறித்த விழிப்புணர்வை வளர்ப்பதற்காக உலகளாவிய அனுசரிப்பு தினமாகும். இப்போது சுற்றுலா என்பது உலகின் மிகப் பெரிய தொழில்துறையாக உள்ளது. உலகப் பொருளாதாரத்தில் இரண்டாவது பங்களிப்பு சுற்றுலாவினால்தான் கிடைக்கிறது. உணவகம், தங்குமிடம், பொழுதுபோக்குத் தளங்கள், வணிக விற்பனையகங்கள் மற்றும் போக்குவரத்து என ஐந்து முக்கிய துறைகளை உள்ளடக்கியதாக சுற்றுலாத்துறை விளங்குகின்றது. உலகளவில் பல கோடி மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை வழங்குவதும் சுற்றுலாத்துறையே.

சுற்றுலாவை திட்டமிடுதலும் மேம்படுத்தலும்

சுற்றுலாத்துறையைப் பொறுத்தவரை எந்தச் செயலையும் திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும். திட்டமிட்டுச் செய்யும் செயல்கள் வெற்றி பெறும் என்பதையே வள்ளுவரும் “எண்ணித் துணிக கருமம்” என்று கூறியுள்ளார். திட்டமிடாமல் செய்யும் செயற்பாடுகள் தோல்வியடையும். வளர்ந்துவரும் நாடுகள் சுற்றுலாவின் மேன்மையை அறிந்து சுற்றுலாத் துறையை வளர்க்க முனைந்துள்ளன.

சுற்றுலாத்துறையில் வெற்றி பெறும் வழிகள்

• முன்னேற்பாடுகளுடன் செய்யப்படும் திட்டங்கள் வெற்றி பெறுகின்றன. அறிவியல் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் திட்டமிட்டுச் சுற்றுலாத்துறையில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளும் அபிவிருத்தி அடைந்த நாடுகளும் சில முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

• அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் பணவருவாயைத் தராததும் மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்காததுமான சுற்றுலா மையங்களை உருவாக்கக் கூடாது.

• ஒரு நாடு குழுச் சுற்றுலாவை வேகமாக ஊக்கப்படுத்தலாமா? ஏன்பதைத் தீர்மானித்துச் செயற்பட வேண்டும்.

• பிரதேச, மாவட்ட மற்றும் மாகாண அளவில் சுற்றுலாவைப் பெருக்கினால் அது அந்நாட்டு பொருளாதார மேம்பாட்டுடன் ஒத்து வருகிறதா? ஏன்பதை தெளிவாக ஆராய வேண்டும்.

• சுற்றுலாவின் வளர்ச்சிக்காக அரசிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புக்களையும், தனியாரிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புக்களையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

• சுற்றுலாவிற்காகச் செலவு செய்யப் பெற்ற உள்நாட்டுப் பணத்தையும், வெளிநாட்டுப் பணத்தையும் கணக்கிட வேண்டும்.

• உள்நாட்டுப் பணம் போதவில்லை என்றால் அயல்நாடுகளில் இருந்து கடன் வாங்கிக் கொள்ளலாமா? என்பதையும் தீர்மானிக்க வேண்டும்.

• சுற்றுலாத்துறை பிற துறைகளுக்குச் சமமாகப் பாவிக்கப்படுகிறதா? அல்லது சிறப்பு நிலை கொடுக்கப்பட வேண்டுமா? என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

• சுற்றுலாத்துறையை நீண்டகால முறையில் மேம்படுத்துவதா? அல்லது பொருளாதாரக் குறையை நிறைவு செய்யக் குறுகிய கால முறையில் மேம்படுத்துவதா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருங்கிணைந்த திட்டம்

சுற்றுலாத்துறை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவுகிறது. எனவே சுற்றுலாத் துறையைப் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து அமைக்க வேண்டும். சுற்றுலா வளர்ச்சிக்காக திட்டமிடுவதும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்காக திட்டமிடுவதும் ஒருங்கிணைந்து ஒத்துச் செல்ல வேண்டும். அனைத்து துறைகளும் ஒன்று சேர்ந்து சுற்றுலாவை வளர்க்க வேண்டும்.

இலங்கையின் சுற்றுலாத்துறை

சுற்றுலாத்துறைக்கு பெயர்பெற்ற நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது. இங்கு ஆடைக் கைத்தொழிலுக்கு அடுத்த நிலையில் சுற்றுலாத்துறை காணப்படுகிறது. இலங்கையில் நிலவுகின்ற உவப்பான வானிலை நிலைமைகள் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது. இயற்கை அழகுடன் கூடிய கடற்கரைகள், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், சமய வழிபாட்டுத் தலங்கள், தேசிய வனவிலங்கு சாலை, தேசியப் பூங்காக்கள் போன்ற சுற்றுலா பகுதிகள் இலங்கையில் பிரபல்யம் பெற்றுள்ளன. இந்நாட்டுக்கே உரித்தான கைப்பணிப் பொருட்கள், ஆயுள்வேத மருந்துகள், சமையற் கலைகள் (உணவுகள்- ஒடியற் கூழ், பனாட்டு, புளுக்கொடியல், பனங்கட்டி) சம்பிரதாய மரபுகள் போன்றனவும் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்துள்ள விடயங்களாகும்.

உவப்பான காலநிலையைக் கொண்ட நுவரெலியாவிற்கு ஏப்ரல் மாதத்திலும், சமயத்துடனும் பொழுதுபோக்குடனும் தொடர்புடைய சிவனொளிபாத மலைக்கு மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலும், மே மற்றும் ஜூன் மாதங்களில்  அநுராதபுரத்துக்கும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் பயணிக்கின்றனர்.

தென்னிலங்கையில் வாழ்பவர்கள் வட இலங்கைக்கான சுற்றுலாவை அதிகளவில் விரும்புகின்றனர். உலக சுற்றுலா நிறுவனத்தினால் உலகில் சுற்றுலாவை மேற்கொள்ளலாம் என அடையாளப்படுத்தப்பட்ட 302 பாரம்பரிய அமைவிடங்களில் ஆறு (06) அமைவிடங்கள் இலங்கையில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கு 1937ஆம் ஆண்டு ‘சுற்றுலாப் பணியகம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

அதன் பின் 1966ஆம் ஆண்டு ‘இலங்கை சுற்றுலா சபை’  என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 1973ஆம் ஆண்டு முதலாவது ஐந்து நட்சத்திர ஹோட்டல் நிறுவப்பட்டது. இவை யாவும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கான மைல் கற்களாகும். 1948ஆம் ஆண்டு ஏறத்தாழ 21,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இலங்கையில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 328 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்ததுடன், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 71 ஆயிரத்து 370 சுற்றுலா பயணிகள் மாத்திரமே வருகை தந்திருந்தனர்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 166,975 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்திருந்த நிலையில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு சுற்றுலாப் பயணி கூட நாட்டிற்கு வருகை தரவில்லை என இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது.

2019ஆம் ஆண்டு முழுகையாக இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,913,702 பேர் ஆக காணப்பட இது 2020ஆம் ஆண்டு முழுமையாக 507,704 பேராகவே காணப்பட்டது. 2020ஆம் ஆண்டு மார்கழி மாதம் மட்டும் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெறும் 393 பேரே ஆகும்.

இலங்கைக்கு 2020ஆம் ஆண்டு ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்ரெம்பர், ஒக்டோபர், நவம்பர் ஆகிய எட்டு மாதங்களில் கொவிட் - 19 தொற்று காரணமாக ஒரு சுற்றுலாப் பயணி கூட வருகை தரவில்லை.

இலங்கைக்கு அன்னிய செலவாணியை பெற்றுத் தரும் பிரதான துறையாக சுற்றுலாத்துறை விளங்குகிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு வகையான வேலைவாய்ப்புக்களை சுற்றுலாத்துறை வழங்குகின்றது.

1998ஆம் ஆண்டு 14,816 மில்லியன் ரூபாவினை அன்னியச் செலவாணியாகப் பெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டில் 2,333,796 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்ததுடன் அவர்களின் ஊடாக அந்த ஆண்டு 4,380.6 மில்லியன் அமெரிக்கா டொலர் வருமானம் கிடைத்திருந்தது. அதேவேளை 2019ஆம் ஆண்டு, சுற்றுலாத்துறை மூலம் இலங்கைக்கு 3,606.9 மில்லியன் அமெரிக்கா டொலரும் 2020ஆம் ஆண்டு 682 மில்லியன் அமெரிக்கா டொலரும் வருமானமாகக் கிடைத்துள்ளது. வளர்ச்சிப் பாதையை நோக்கி நகர்ந்த இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் பாரிய பின்னடைவை நோக்கி நகர்ந்துள்ளமை, இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின் மூலம் காணக்கூடியதாக உள்ளது.

1971ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கையில் இளைஞர் கிளர்ச்சி காரணமாக இத்தொழிற்றுறையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 1983ஆம் ஆண்டு யூலை மாதத்தில் ஏற்பட்ட இனப் பிரச்சினை காரணமாகவும் 1996இல் ஏற்பட்ட மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல், மற்றும் சுற்றுலா மையங்களில் காணப்பட்ட பதற்ற நிலைமை, 30 வருடகாலமாக நிகழ்ந்த உள்நாட்டு யுத்தம், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடந்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதல்கள, உலகில் 2019ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் 2020 மார்ச் மாதத்துக்குப் பின்பு மோசமான நிலைமை போன்றன காரணமாகவும் சுற்றுலாத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

எனினும் 2021ஆம் ஆண்டு 195,000க்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளே வருகை தந்துள்ளார்கள் என இலங்கையின் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டு முழுமையாக (ஜனவரி தொடக்கம் டிசெம்பர் வரை) உலகின் 187 நாடுகளில் இருந்து 719,978 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள். இந்த வருடம் (2023) ஜனவரி தொடக்கம் ஏப்ரல் வரையான நான்கு மாத காலப் பகுதியில் உலகின் 177 நாடுகளில் இருந்து 441,177 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளார்கள். பயணத் தளமான Travel Triangle மூலம் 2023ஆம் ஆண்டில் பார்வையிடும் சிறந்த 24 நாடுகளில் இலங்கை முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பயண முக்கோணத்தின்படி (Travel Triangle) தங்கக் கடற்கரைகள், வன விலங்குகள் நிறைந்த காடுகள் உருளும் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பனி மூடிய மலைகள் ஆகியவை இலங்கையை ஆசிய நாடுகளுக்குச் செல்ல சிறந்த நாடுகளில் ஒன்றாக உருவாக்கி உள்ளது.

2023 ஜனவரியில் 161.80 அமெரிக்க டொலராக இருந்த இலங்கையின் சுற்றுலா வருமானம் பெப்ரவரியில் 169.90 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12வீதத்தை சுற்றுலாத் துறையானது கொண்டுள்ளது. 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி தொடக்கம் மார்ச் வரை) மதிப்பிடப்பட்ட சுற்றுலாத்துறையில் கிடைத்த வருமானம் 529.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

2023ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,487,303 ஆகும். அதேவேளை 2023ஆம் ஆண்டு இலங்கை சுற்றுலாத் துறைக்கு கிடைத்த வருமானம் 2.1 பில்லியன் டொலர்கள் ஆகும்.

2024ஆம் ஆண்டில் 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், 4 பில்லியன் டொலருக்கு மேல் சம்பாதிக்கவும் இலங்கை திட்டமிட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் வாராந்த அறிக்கை தகவல்களின்படி, 2024.09.17ஆம் திகதி வரை 1,433,346 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளார்கள். 2030ஆம் ஆண்டளவில் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் 21.6 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டவும் நீண்ட கால இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா மனித வாழ்வுடன் இணைந்து, பிணைந்து சாதி, மத, நிற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தையும், உலக மக்களிடையே நல்லெண்ணங்களையும் வளர்க்கிறது.

ஒரு நாட்டின் அந்நியச் செலாவணியைப் பெருக்கி, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி ஏற்படுத்துகிறது. இது இன்று இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஒரு முக்கியமான தொழில் துறையாக அமைந்துள்ளது.

Bootstrap
Get connected with us on social networks:
Puthiya Kural Newspaper

Puthiya Kural – Canada’s Tamil Monthly Newspaper brings you Canada Latest News, in-depth political analysis, and diaspora stories. Stay updated with breaking news, top headlines, and exclusive updates on Sri Lanka and the world—all in Tamil, with videos and photos.

Contact

Suite 2000, No: 1225 Kennady Road, Scarborough. On. Canada

admin@puthiyakural.ca

Copyright © Puthiya Kural Newspaper Publications Canada 2024. All Rights Reserved | Digital Solutions by Think Branding Inc