புகாரின் பேரில் போலீசாரும் தனிப்படை அமைத்து நடத்திய தேடுதல் வேட்டையில் அகமதாபாத்தில் அந்த கும்பலை சுற்றி வளைக்க அவர்கள் தப்பியோடி தலைமறைவாகி விட்டனர்.
ரூபாய் நோட்டில் காந்திக்கு பதில் பிரபல நடிகரின் படம் இடம்பெற்றிருந்தால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
சாகித் கபூர், விஜய் சேதுபதி நடிப்பில் ஓடிடி-யில் வெளியாகி ஹிட் அடித்த வெப் தொடர் தான் ‘ஃபார்ஸி’ (Farzi). இதில் நாயகனாக வரும் சாகித் கபூர் ஓவியங்களை வரையும் ஆர்ட்டிஸ்டாக நடித்திருப்பார். “சூப்பர் நோட்” எனப்படும் அச்சு அசல் கள்ள நோட்டுக்களை டிசைன் செய்யும் நாயகன் அதன் மூலம் ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து பணக்காரனாக மாறும் வகையில் இந்த கதை உருவாக்கப்பட்டிருக்கும்.
ஓடிடியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த வெப் தொடரைப் பார்த்து இன்ஸ்பயர் ஆன குஜராத் கும்பல் ஒன்று தாங்களும் இதுபோன்று கள்ள நோட்டு அடித்து பெரும் செல்வந்தர்களாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்காக டெக்னிக்கலாக களத்தில் இறங்கிய அந்த கும்பல் அச்சடிக்கும் பணத்திற்கான ரியல் காகிதம், அச்சடிக்கும் இயந்திரம், மற்றும் கள்ள நோட்டுக்கான டிசைன் என அனைத்தையும் பக்காவாக தயாரித்து பணத்தை அச்சடிக்கத் தொடங்கியுள்ளனர்.
சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை அச்சடித்த அந்த கும்பல், அந்த பணத்தை நகை வியாபாரி ஒருவரிடம் கொடுத்து சுமார் 2,100 கிராம் தங்கத்தை அபேஸ் செய்து விட்டு எஸ்கேப் ஆகியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசாரும் தனிப்படை அமைத்து நடத்திய தேடுதல் வேட்டையில் அகமதாபாத்தில் அந்த கும்பலை சுற்றி வளைக்க அவர்கள் தப்பியோடி தலைமறைவாகி விட்டனர்.
ஆனால் அந்த இடத்தில் புத்தம் புதிதாக அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுக்கள், பிரிண்டிங் மெஷின்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். அந்த கள்ள நோட்டுக்களை எடுத்துப் பார்த்த போது தான் போலீசாரே சற்று அதிர்ந்து போயினர். அந்த ரூபாய் நோட்டில் காந்தி படம் இருக்க வேண்டிய இடத்தில் இந்தி நடிகர் அனுபம் கெர் புகைப்படம் இருந்துள்ளது.
காந்திக்கும், அனுபம் கெருக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு அவர்கள் முட்டாள்களா என போலீசார் ஆத்திரம் அடைந்துள்ளனர். மேலும் குஜராத்தில் இருந்து கொண்டு மகாத்மா காந்தியைக் கூட தெரியாமல் ஒரு கும்பல் இருந்திருக்கிறது என்பதை போலீசாராலேயே நம்ப முடியவில்லை.
அதுமட்டுமல்லாமல் அந்த கள்ள நோட்டில் மேலும் பல ஆச்சரியங்கள் ஒளிந்திருந்தன. “ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா” என அச்சடிப்பதற்குப் பதிலாக “ரிசோல் பேங்க் ஆப் இந்தியா” என மாற்றி ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் அச்சடித்திருந்ததை பார்த்தபோது போலீசாராலேயே அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதற்கு நடுவில் “ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா” என்ற வாசகத்தையும் அவர்கள் சம்பந்தமே இல்லாமல் சேர்த்திருந்தனர்.
ஒரு 500 ரூபாய் கள்ள நோட்டை இந்த அளவுக்கு கந்தரகோலமாக அச்சடித்த அந்த கும்பலை தேச துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என போலீசார் துடித்தாலும், சட்டத்திற்கு உட்பட்டு கள்ள நோட்டு வழக்கு பதிவு செய்தனர்.
தரமான காகிதம், உயர்தரமான பிரிண்டிங் மெஷின், துல்லியமான டிசைன் என அனைத்திலும் அந்த கும்பல் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், காந்தி போட்டோக்கு பதிலாக அனுபம் கெர் போட்டோவை வைத்தவனை மட்டும் தங்களால் மன்னிக்கவே முடியாது என போலீசார் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த கும்பல் சூரத் பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் 4 பேரை சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர். அவர்களில் யார்? அந்த அனுபம் கெர் போட்டோவை ரூபாய் நோட்டில் வைக்கச் சொன்னது என கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே இந்த வீடியோவை நடிகர் அனுபம் கெர் தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு, “என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என பதிவிட்டுள்ளார்.